சிங்கப்பூரில் எட்டு வயதுச் சிறுவனின் கையில் எலும்பு முறிவு ஏற்பட காரணமாக இருந்த 37 வயது கல்வியாளர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தமது மாணவராக இருந்த அந்தச் சிறுவனை டான் குவான் ஹோங் என்ற கல்வியாளர் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்வாண்டு ஜனவரி 30ஆம் தேதி, தாம்சன் ரோட்டில் உள்ள வளாகத்தில் சம்பவம் நேர்ந்தது.
தள்ளப்பட்ட மாணவனின் இடது முன்னங்கையில் எலும்பு முறிவும் கீழ் உதட்டில் காயமும் ஏற்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
சிறுவனின் பாதுகாப்புக்காக அவனது பெயர் வெளியிடப்படவில்லை.
குற்றஞ்சாட்டப்பட்ட டான், ‘ஸ்டிராபெரி ஹோல்டிங்ஸ்’ என்ற நிகழ்ச்சி நிர்வாக நிறுவனத்தின் உரிமையாளர் என்று நம்பப்படுகிறது. அந்த நிறுவனம், கல்வி, உத்திபூர்வ ஆலோசனைகளையும் வழங்குவதாகக் கணக்கியல், நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்தின் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டானின் வழக்கு ஜூன் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்கப்படும்.
சிங்கப்பூரில் 14 வயதுக்குக்கீழ் உள்ள பிள்ளைகளை வேண்டுமென்றே காயப்படுத்தியோருக்கு 12 ஆண்டுவரை சிறைத் தண்டனை, அதிகபட்சம் $20,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

