சிறப்புத் தேவையுடைய 12 வயது மகனை முறையாகக் கவனிக்கவில்லை என்று அச்சிறுவனின் தாயார் திருவாட்டி ஹுவாங், ஃபேஸ்புக்கில் ஜனவரி 12ஆம் தேதி பதிவிட்டு, தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின்மீது (என்யூஹெச்) குற்றஞ்சாட்டியுள்ளார்.
அச்சிறுவன் கடந்த டிசம்பர் மாதம் தொடர்ந்து பல நாள்களாக வாந்தி எடுத்துவந்துள்ளான்.
அதனால் அவனது குடும்பத்தார், டிசம்பர் 27ஆம்தேதி அவனை தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஒரு மருத்துவர், எவ்வித மருந்துகளையும் வழங்காமல், சிறுவன் ‘முழுவதுமாக வாந்தியெடுத்துவிடுவது’ குணமாக உதவும் என்று கூறியுள்ளார்.
அதிருப்தியடைந்த குடும்பத்தினர் அங்கிருந்த மூத்த மருத்துவரை அழைத்துள்ளனர்.
அவர் அளித்த சிகிச்சையின் மூலம் முற்றிலுமாக வாந்தி எடுப்பது நிறுத்தப்படாமல் இருந்தாலும் சிறுவனின் நிலைமை முன்னேற்றம் அடைந்தது.
பிறகு, சிறுவன் தொடர்ந்து வாந்தி எடுத்து அவதிப்பட்டு தோலில் எலும்புகள் தெரியுமளவு மெலிந்துவிட்ட நிலையில், குடும்பத்தினர் என்யூஹெச் சிறப்புப் பிரிவுக்கு ஜனவரி மாதம் 12ஆம் தேதி சென்றனர்.
அங்கிருந்த மருத்துவரும் சிறுவனைக் கண்காணித்துவரும்படி ஆலோசனை கூறி, மருந்துகள் எதுவும் வழங்கவில்லை, மேற்படி சோதனைகள் மேற்கொள்ளவில்லை.
தொடர்புடைய செய்திகள்
அதனால் அந்தத் தாயார் என்யூஹெச்சில் நடந்த அனுபவத்தை, “ஒரு ஏற்றுக்கொள்ளமுடியாத, மிகவும் ஏமாற்றமும் வேதனையும் அளிக்கும் சம்பவமாக” சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார். சிறப்புப் பிரிவு மருத்துவர் சிறுவனின் மருத்துவ நிலைமையை விளக்காததோடு, முறையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்மொழியத் தவறிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுபற்றி என்யூஹெச்சின் மருத்துவச் சேவைப் பிரிவிடம் புகார் அளித்துள்ளார்.
மாற்று சிறப்பு மருத்துவரைக் கட்டணம் இன்றி ஏற்பாடு செய்து தரவும் இதுவரை செய்துள்ள மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டணங்களைத் திருப்பித் தரவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சுகாதார அமைச்சிடம் இதன் விவரங்களைத் தெரிவிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை (ஜனவரி 15) ஃபேஸ்புக்கில் பதிவிட்ட தாயார் ஹுவாங், தனது மகன் தற்போது கேகே சிறார்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அங்கு எடுக்கப்பட்ட ‘எக்ஸ்ரே’யில் அடையாளம் தெரியாத பொருள் வயிற்றில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சையில் அது வெளியேற்றப்பட்டாலும் வாந்திக்கு காரணம் அதுதானா அல்லது வேறு ஏதுமா என்று மருத்துவர்கள் ஆராய்வதாகக் கூறியுள்ளார்.
ஊடகக் கேள்விக்கு பதிலளித்த என்யூஹெச் பேச்சாளர், அவசரப் பிரிவுக்கு வந்த நாளன்றே, சிறுவனின் குடும்பத்தினரிடம் அவனை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதிக்க ஆலோசனை வழங்கப்பட்டது. அதனை அவர்கள் மறுத்துவிட்டனர் என்றார். இதனை சிறுவனின் தாயார் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகப் பதிவுபற்றி தெரியும் என்ற பேச்சாளர், அனைத்து நோயாளிகளின் கவலைகளையும் மருத்துவமனை முக்கியமாகக் கருதுவதோடு, அவர்களுக்கான மருத்துவ பரிந்துரைகளைக் கவனமாக மேற்கொள்கிறது என்று உறுதிசெய்தார். நடந்த சம்பவத்தை மருத்துவமனை மறுஆய்வு செய்வதையும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதையும் அவர் தெரிவித்தார்.

