சுமார் 33 ஆண்டுகளாகச் சட்டத்தை ஏமாற்றித் தலைமறைவாக இருந்த 80 வயது முதியவர், அபாயகரமான ஆயுதத்தைக் கொண்டு ஒருவரைத் தாக்கிய குற்றத்துக்காக இறுதியாகக் கைதுசெய்யப்பட்டார்.
சம்பவம் நடந்தபோது ஒரு ‘கடன்முதலை’யாகச் செயல்பட்ட இங் குவாங் கெங் என்ற அந்த முதியவர்மீது செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
அந்த முதியவர், சம்பவத்தின்போது 27 வயதான திரு லிம் கிம் லெங் என்ற ஆடவருக்கு $20,000 கடன் வழங்கியிருந்தார். அதைத் திரும்பப் பெற இங், கடந்த 1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம், புளோக் 14 தாமான் ஹோ சுவீயில் வாழ்ந்த திரு லிம்மை நண்பர்கள் இருவருடன் சந்திக்கச் சென்றிருந்தார்.
அப்போது இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் இங், ஒரு கத்தியால் லிம்மை அவரது தொடையில் தாக்கினார். படுகாயமடைந்த லிம், பிறகு அலெக்சாண்ட்ரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, காயத்தின் தீவிரத்தால் அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மரணமடைந்தார்.
பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் பிடிபடாமல் தப்பித்து வாழ்ந்த லிம், ஜோகூர்பாருவில் குடிநுழைவுக் குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்டு, 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அபாயகரமான ஆயுதத்தால் வேண்டுமென்றே மோசமான காயம் ஏற்படுத்திய குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். ஆரம்பத்தில் அவர்மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக் குற்றம் ஏன் குறைக்கப்பட்டது என்பதன் காரணம் வெளியிடப்படவில்லை.
டிசம்பர் 30ஆம் தேதி நீதிமன்றம் லிம்முக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது.

