முறையற்ற கட்டணச் சேவை வழங்கியதாக நிறுவனத்தின்மீது குற்றச்சாட்டு

முறையற்ற கட்டணச் சேவை வழங்கியதாக நிறுவனத்தின்மீது குற்றச்சாட்டு

2 mins read
e57d2ec3-f270-4670-82de-194d0645f5ae
வெளிநாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பவேண்டிய பணம், 2020ஆம் ஆண்டு ஜனவரிக்கும் 2022ஆம் ஆண்டு செப்டம்பருக்கும் இடையில் பெறப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முறையற்ற கட்டணச் சேவை வழங்கியதாக உள்ளூர் நிறுவனமொன்றின்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதன் வங்கிக் கணக்குகளில் $104 மில்லியனுக்கும் மேல் பெறப்பட்டதாகக் கூறப்பட்டது. பணம் அனுப்பியோரில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.

வெளிநாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பவேண்டிய அந்தப் பணம், 2020ஆம் ஆண்டு ஜனவரிக்கும் 2022ஆம் ஆண்டு செப்டம்பருக்கும் இடையில் பெறப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

சிங்கப்பூர் பிரி‌ஷியஸ் மெட்டல்ஸ் எக்ஸ்ச்சேஞ்ச் எனும் அந்த நிறுவனம் உரிமமின்றிக் கட்டணச் சேவைகளை வழங்கியதாக வியாழக்கிழமை (ஜனவரி 22) குற்றஞ்சாட்டப்பட்டது. அந்நிறுவனம், உலோகங்களையும் உலோகத் தாதுக்களையும் கையாள்கிறது.

நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவரான 55 வயது விக்டர் ஃபூ சியாங் குவாங் மீதும் அத்தகைய ஓர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மலேசியரான ஃபூ, சிங்கப்பூரின் நிரந்தரவாசியும்கூட. அத்தகைய கட்டணச் சேவைகளை நிறுவனம் வழங்குவதற்கு அனுமதித்ததாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்தகைய உரிமமற்ற சேவைகள், எல்லை தாண்டிய நிதி மோசடிகள் இடம்பெறுவதற்கு உதவக்கூடும் என்று காவல்துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

நிறுவனம் பரிவர்த்தனைத் தளமொன்றை இயக்குவதாகக் காவல்துறை சொன்னது. தனியாரும் நிறுவனத்தாரும் விலைமதிப்பற்ற உலோகங்களை வாங்கவும் சேமிக்கவும் வணிகம் செய்யவும் அதனைப் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உரிமமின்றி நிறுவனமொன்றைக் கட்டணச் சேவைகளை வழங்க அனுமதித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒருவருக்கு மூவாண்டு வரை சிறைத்தண்டனையோ $125,000 வரை அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படக்கூடும்.

உரிமமில்லாமல் அத்தகைய சேவைகளை வழங்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு $250,000 வரை அபராதம் விதிக்கப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்