மறுசுழற்சி இயந்திரங்கள் குறித்த குற்றச்சாட்டுகள்; தேசிய சுற்றுப்புற அமைப்பின் விளக்கம்

மறுசுழற்சி இயந்திரங்கள் குறித்த குற்றச்சாட்டுகள்; தேசிய சுற்றுப்புற அமைப்பின் விளக்கம்

2 mins read
3e622871-9d77-4ab4-8d32-d499720bd32b
வாடிக்கையாளர்கள் ஒரே பரிவர்த்தனையில் சராசரியாக 5.5 பானக் கொள்கலன்களைத் திருப்பிக் கொடுத்துள்ளதாகத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மறுசுழற்சிக்காகப் பொருள்களை பெறும் இயந்திரத் திட்டத்தின் மூலம் திரும்பப் பெறப்பட்ட பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் ஊழல் நடந்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளைத் தேசிய சுற்றுப்புற அமைப்பு ஆகஸ்ட் 15ல் மறுத்துள்ளதுடன், இத்தகைய கருத்துகள் தவறானவை என்றும் கூறியுள்ளது.

பானக் கொள்கலன் திரும்பப் பெறும் திட்டத்தின் (பிசிஆர்எஸ்) கீழ் திருப்பி அளிக்கப்பட்ட பானக் கொள்கலன்களின் எண்ணிக்கை, திரும்பப் பெற்ற வைப்புத் தொகை ஆகியவற்றைப் பற்றிய இணையத்தில் வெளிவந்த கலந்துரையாடல்களைத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தனது ஃபேஸ்புக் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏப்ரல் முதல் ஜூலை வரை, இத்தகைய இயந்திரங்களில் போடப்பட்ட 5.5 மில்லியன் பயன்படுத்தப்பட்ட போத்தல்கள், டப்பாக்கள் ஆகியவற்றுக்கு 1 மில்லியனுக்கும் அதிகமான வெற்றியடைந்த பணத்தைத் திரும்பப் பெறும் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாக  நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி ஆகஸ்ட் 5ல் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இணையத்தில் சிலர் திரும்ப அளிக்கப்பட்ட 5.5 மில்லியன் கொள்கலன்களில் 1 மில்லியன் கொள்கலன்களுக்கான வைப்புத் தொகை மட்டுமே திருப்பியளிக்கப்பட்டுள்ளது எனத் தவறாகப் புரிந்துகொண்டதாகத் தெரிகிறது.

இந்த விளக்கம் தவறானது என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் பல கொள்கலன்களைக் கொடுத்து, அதற்கான பணத்தைப் பெற முடியும் என்று அது விளக்கமளித்தது.

அதாவது, வாடிக்கையாளர்கள் 5.5 மில்லியன் பானக் கொள்கலன்களைத் திருப்பிக் கொடுக்க 1 மில்லியனுக்கும் அதிகமான முறை இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

 சராசரியாக, ஒரு பரிவர்த்தனையில் வாடிக்கையாளர்கள் 5.5 கொள்கலன்களைத் திருப்பிக் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு கொள்கலனுக்கும் 10 காசுகள் வைப்புத் தொகை என்பதால், கிட்டத்தட்ட $550,000 திரும்ப வழங்கப்பட்டுள்ளதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு கூறியுள்ளது.

“எனவே, நிதி முறைகேடு அல்லது ஊழல் தொடர்பான எந்தவொரு குற்றச்சாட்டுகளும் தவறானவை” என்று அமைப்பு கூறியது.

‘பிசிஆர்எஸ்’ திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் டப்பா, போத்தல் ஆகியவற்றில் அடைக்கப்பட்ட ஒவ்வொரு பானத்திற்கும் கூடுதலாக 10 காசுகள் செலுத்த வேண்டும். 

ஆனால் மறுசுழற்சிக்காகக் காலி போத்தல்களைப் பெற்றுக்கொண்டு பணம் தரும் இயந்திரத்தில் பயன்படுத்தப்பட்ட கொள்கலன்களைப் போடும்போது இந்தத் தொகையை அவர்கள் திரும்பப் பெறலாம்.

ஏப்ரல் 1 ஆம் தேதி திட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து, இயந்திரக் கோளாறுகள் காரணமாகத் தங்களுக்கு உடனடியாகப் பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்றும் வைப்புத் தொகையைப் பெற ‘பிசிஆர்எஸ்’க்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டியிருந்தது என்றும் சில பயனீட்டாளர்கள் புகார் அளித்தனர்.

இயந்திரங்கள் கொள்கலன்களை ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும் புகார்கள் வந்தன.

‘பிசிஆர்எஸ்’  இயந்திரங்களில் பெரும்பாலான பரிவர்த்தனைகளும் கொள்கலன் திரும்பப் பெறுதல்களும் வெற்றியடைந்துள்ளதாக ஆகஸ்ட் 5ஆம் தேதி டாக்டர் ஜனில் கூறினார்.

“இயந்திரங்களில் ஏற்பட்ட ஒருசில சிக்கல்களுக்கு, திட்டத்தைச் செயல்படுத்தும் ‘பிசிஆர்எஸ்’ நிறுவனம், அதை விரைவில் தீர்ப்பதற்கு இயந்திரங்களை இயக்குவோருடன் நெருக்கமாகப் பணியாற்றியது” என்று அவர் அப்போது கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மறுசுழற்சிதேசிய சுற்றுப்புற வாரியம்வாடிக்கையாளர்கொள்கலன்