ஹாலந்து ரோடு தரைவீட்டில் இம்மாதம் 16ஆம் தேதி (திங்கட்கிழமை ) நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெளிநாட்டைச் சேர்ந்த இரு ஆடவர்கள், அருகே இன்னும் கட்டி முடிக்கப்படாத வீட்டின் வழியாக அந்த வீட்டுக்குள் புகுந்தது தெரிய வந்துள்ளது.
அந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சீனாவைச் சேர்ந்த ஸாங் யோங்சியாங், 52, ஃபெங் யுன்லோங், 38, ஆகிய இருவரையும் கொள்ளை நடைபெற்ற மூன்று மாடி வீட்டுக்கு வியாழக்கிழமை (டிசம்பர் 26) காலை காவல்துறையினர் கொண்டு சென்றனர். அந்த வருகை ஏறத்தாழ 20 நிமிடங்கள் நீடித்தது.
அந்த கிரீன்லீஃவ் வியூ வீட்டினுள் இருவரில் ஒருவர் திருடிக்கொண்டு இருந்தபோது, மற்றவர், யாரும் வருகிறார்களா என்று வெளியே நோட்டம் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார்.
சம்பவம் நிகழ்ந்த வீட்டின் வலதுபுறம் ஒரு வீடு கட்டுமானத்தில் உள்ளது. 2025 ஜூலையில் அந்தக் கட்டுமானம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அங்கு இருந்த அறிவிப்புப் பலகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஸாங் என்பவர் வியாழக்கிழமை காலை 10.25 மணியளவில் சம்பவ இடத்துக்குக் கொண்டு வரப்பட்டார். மூன்று காவல்துறை அதிகாரிகளின் பிடியில் இருந்த அவரது கால்களுக்கும் கைகளுக்கும் விலங்கிடப்பட்டு இருந்தது.
‘எந்த வீட்டுக்குள் நுழைந்தீர்கள்’ என்று ஓர் அதிகாரி கேட்க, ‘அருகில் இருந்த வீட்டின் வழியாக’ என்று ஸாங் மாண்டரின் மொழியில் பதில் கூறினார்.
பின்னர் கொள்ளை நடந்த வீட்டின் பக்கவாட்டு வாயில் வரை அவர்கள் நடந்து சென்றபின் காவல்துறையின் கார் ஒன்றில் ஸாங் திரும்ப அழைத்துச் செல்லப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஐந்து நிமிடங்கள் கழித்து, ஃபெங் அங்கு கொண்டுவரப்பட்டார்.
கட்டுமானத் தளத்தில் நிறுத்தப்பட்டதும், அங்கிருந்த சுவருக்கும் நீலநிற நீர்புகா தார்பாலின் பாயுக்கும் இடையே இருந்த இடைவெளியைக் காட்டி, ‘இந்த இடைவெளி வாயிலாக நுழைந்தோம்’ என்று மாண்டரின் மொழியில் ஃபெங் தெரிவித்தார்.
கட்டுமான வீட்டின் மூன்றாவது தளத்தில் இருந்து கிரீன்லீஃவ் வியூ வீட்டுக்குள் ஸாங் நுழைந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. இரு வீட்டின் அருகிலும் யாரும் வருகிறார்களா என்று ஃபெங் கவனித்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
அந்த வீட்டுக்குள் இருந்த $8,800 மதிப்புள்ள கார்டியர் ரோட்ஸ்டர் (Cartier Roadster) கைக்கடிகாரத்தையும் $150 மதிப்புள்ள கேஸியோ எடிஃபைஸ் (Casio Edifice) கைக்கடிகாரத்தையும் அவ்விருவரும் திருடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவற்றுடன், $5,000 மதிப்புள்ள பணப்பை, கிட்டதட்ட $3,570 அளவுக்கு ரொக்கப் பணம், சில நகைகள் ஆகியனவும் அங்கிருந்து களவாடப்பட்டு இருந்தன.
கொள்ளைச் சம்பவம் டிசம்பர் 16 இரவு 9 மணியளவில், வீட்டில் யாரும் இல்லாத வேளையில் நிகழ்ந்தது. அது குறித்து டிசம்பர் 18ஆம் தேதி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது இருவரும் மேலும் சில குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.