சிங்கப்பூரின் முதல் தானியங்கி பேருந்துக்கு ஜெர்மனியைச் சேர்ந்த காப்புறுதி நிறுவனமான எலாயன்சின் உள்ளூர் பிரிவு காப்புறுதித் திட்டத்தை வழங்குகிறது.
இப்பேருந்தை ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசா ஒருங்கிணைக்கப்பட்ட உல்லாசத் தளத்தில் ‘வீரைட்’ இயக்குகிறது.
தானியங்கி பேருந்து அலியான்ஸ் நிறுவனம் காப்புறுதியை வழங்குவது இதுவே முதல்முறையாகும்.
தானியங்கி பேருந்து சேதமடைந்தால் அதற்கான காப்புறுதி வழங்கப்படும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அலியான்ஸ் காப்புறுதி சிங்கப்பூர் கூறியது.
இதில் பேருந்தின் கேமராக்களும் உணர்கருவிகளும் அடங்கும்.
தானியங்கி பேருந்து சொத்துகளைச் சேதப்படுத்தினாலோ அல்லது காயம், மரணம் விளைவித்தாலோ சீனாவின் குவாங்சோவில் தலைமையகம் கொண்ட ‘வீரைட்’ செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகைக்கான பணத்தை காப்பறுதித் திட்டம் வழங்கும்.
இந்தப் புதிய ஏற்பாடு காப்புறுதித் துறையில் ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது.
பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பை வலுப்படுத்த வீடமைப்புப் பேட்டைகளுக்குள் தானியங்கி குறுக்குச் சேவை பேருந்துகளுக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்துவரும் நிலையில் தானியங்கி பேருந்துக்கான காப்புறுதியை வழங்க அலியான்ஸ் தொடங்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சொத்துகள் சோதமடைந்தாலோ அல்லது காயம், மரணம் ஏற்படுத்தினாலோ அதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும் காப்புறுதித் திட்டத்தைச் சிங்கப்பூரில் உள்ள அனைத்துத் தானியங்கி வாகனங்களும் கொண்டிருக்க வேண்டும்.
தானியங்கி வாகனங்களின் சோதனைத் திட்டங்களை மேம்படுத்த 2017ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சாலைப் போக்குவரத்து விதிமுறைகளில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
வீரைட் நிறுவனம் இயக்கும் தானியங்கி பேருந்தில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் எட்டு பேர் பயணம் செய்யலாம்.
ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவுக்கு உட்பட்ட 1.2 கிலோ மீட்டர் சாலையில் அது சேவை வழங்கும்.
பேருந்து வேறோர் இடத்திலிருந்து கண்காணிக்கப்படும்.