சிங்கப்பூர் காப்புறுதி நிறுவனமான இன்கம் இன்ஷுரன்சுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான ஜெர்மானிய காப்புறுதி நிறுவனமான அலியான்சின் திட்டம் ஈடேறவில்லை.
இன்கமின் 51 விழுக்காட்டுப் பங்குகளை US$1.5 பில்லியனுக்கு (S$2.2பி.) கையகப்படுத்த ஜூலை 17ஆம் தேதி முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தை தான் கைவிடுவதாக அலியான்ஸ் திங்கட்கிழமை (டிசம்பர் 16) வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
அதிகம் விவாதிக்கப்பட்ட இந்த இணைப்பை அக்டோபர் 14ஆம் தேதி அரசாங்கம் நிறுத்தி இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“இன்கம் இன்ஷுரன்சின் தொடர் வளர்ச்சிக்கும் சிங்கப்பூர் மக்களின் அனுகூலத்துக்காக அதன் உத்திபூர்வ நோக்கத்திற்கும் ஆதரவளிப்பதில் தானே சரியான பங்காளி என அலியான்ஸ் உறுதியாக நம்புகிறது. ஆனால் இந்தத் தருணத்தில் அதன் முன்மொழிவை மீட்டுக்கொள்வதற்கான முடிவு அலியான்சின் நிதி ஒழுங்கை கோடிட்டுக் காட்டுகிறது,” என்று அது கூறியது.
அலியான்ஸ் எஸ்இ-யின் இயக்குநர் சபை உறுப்பினரும் ஆசிய-பசிபிக் வட்டாரத்தின் பொறுப்பாளருமான ரெனேட் வாக்னர், “சிங்கப்பூர் அரசாங்கத்தின் முடிவை நாங்கள் மதிக்கிறோம்,” எனக் கூறினார்.
அலியான்ஸ்-இன்கம் இணைப்பால் இன்கமின் வாடிக்கையாளர்கள், அதிகரித்துவரும் சிங்கப்பூர் வாடிக்கையாளர்களின் நற்பலனுக்காக இரு வலுவான தொழில் நிறுவனங்கள் ஒன்றிணையும் என அலியான்ஸ் இன்னும் நம்புவதாக அவர் சொன்னார்.
இந்த முடிவை எடுப்பதில் அலியான்சுக்கு வருத்தம் இருந்தாலும், சிங்கப்பூர் காப்புறுதிச் சந்தையின் தொடர் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் ஆதரவளிக்கும் முயற்சி தொடரும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என்று திருவாட்டி வாக்னர் கூறினார்.
இந்நிலையில், இன்கமின் இயக்குநர் சபையும் என்டியுசி என்டர்பிரைசும் திங்கட்கிழமை வெளியிட்ட தனித்தனி அறிக்கைகளில், காப்புறுதிச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அலியான்சின் திட்டம் கைவிடப்பட்டதை ஏற்றுக்கொண்டன.
தொடர்புடைய செய்திகள்
இன்கமுக்கு வர்த்தகம் எப்போதும்போல தொடரும் என்றும் இந்த விவகாரத்தால் வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பு எதுவுமில்லை என்றும் இன்கமின் இயக்குநர் சபை கூறியது.
அரசாங்கத்தின் கவலைகளை எவ்வாறு சரிசெய்வது என்பதை ஆராயவும் மிக முக்கியமாக, நீடித்த அடிப்படையில் இன்கமின் நிதி மீள்திறனை மேலும் வலுப்படுத்தக்கூடிய அனைத்து உத்திபூர்வத் தெரிவுகளைப் பரிசீலிக்கவும் நேரம் எடுக்கும் என என்டியுசி என்டர்பிரைஸ் கூறியது.