வீவக வீடுகளில் ஆறு வளர்ப்புப் பூனைகள் வரை பராமரிக்க அனுமதி

வீவக வீடுகளில் ஆறு வளர்ப்புப் பூனைகள் வரை பராமரிக்க அனுமதி

2 mins read
ஈராண்டு சோதனைத் திட்டத்தின்கீழ் வரம்பு உயர்வு
78b70356-0cdf-4316-89f7-69469c1aa8d7
விஸ்மா கேலாங் செராயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய வளர்ச்சி மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் பூனைப் பராமரிப்பாளர்களுடன் அளவளாவினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விலங்கு, கால்நடை மருத்துவச் சேவை அமைப்பு (ஏவிஎஸ்) அறிமுகப்படுத்தியுள்ள ஈராண்டு சோதனைத் திட்டத்தின்கீழ், புதிய விதிகளைப் பூர்த்திசெய்யும் வளர்ப்புப் பூனைப் பராமரிப்பாளர்கள், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் ஆறு பூனைகள் வரை வளர்க்க அனுமதிக்கப்படுவர். வழக்கமாக ஒரு வீட்டில் இரண்டு பூனைகள் மட்டுமே வளர்க்கலாம் என்ற வரம்பு உயர்த்தப்படுகிறது.

ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கும் உரிமம் வழங்கும் திட்டம், பூனைப் பராமரிப்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் கொண்டுவரப்படுகிறது.

பொது இடங்களிலிருந்து மீட்கப்படும் அல்லது விலங்குநல அமைப்புகள், தனிப்பட்ட தொடர்புகள் மூலம் பரிந்துரைக்கப்படும் பூனைகளுக்குத் தற்காலிகப் புகலிடம் அளிக்கும் அவர்களில் பலர், வழக்கமான வரம்பைவிட அதிக எண்ணிக்கையிலான பூனைகளைப் பராமரித்து வருகின்றனர்.

“இந்தத் தன்னார்வலர்கள் தங்களது வீடுகளைத் திறந்து, நோயுற்ற, காயமடைந்த, அந்திமகாலப் பராமரிப்பு தேவைப்படும் அல்லது தத்தெடுக்கப்படுவதற்குக் காத்திருக்கும் பூனைகளைப் பராமரித்து வருகின்றனர்,” என்று விஸ்மா கேலாங் செராயில் சனிக்கிழமை (ஜூலை 18) நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய வளர்ச்சி மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் கூறினார்.

வீவக வீடுகளில் வசிக்கும் அண்டைவீட்டாரின் தேவைகளுக்கும் பூனைப் பராமரிப்பாளர்களின் தேவைகளுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவதற்காகவே, வீவக வீடுகளில் ஆறு பூனைகள் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஏவிஎஸ் அமைப்பும் வீவகவும் தெரிவித்தன.

கடந்த 2025 டிசம்பர், 2026 ஜனவரிக்கு இடையே 61 பூனைப் பராமரிப்பாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் ஆறு பூனைகள் வரை பராமரித்து வந்தது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

தனியார் வீடுகளில் வசிக்கும் பராமரிப்பாளர்கள் இச்சோதனைத் திட்டத்தின்கீழ் 10 பூனைகள் வரை வளர்க்க அனுமதிக்கப்படுவர். கூட்டுரிமை வீடுகள், தரைவீடுகள் போன்றவை அதிக எண்ணிக்கையிலான பூனைகளுக்கு வசதியாக இருக்கும் என்பதால் இந்த வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

வளர்ப்புப் பூனைகளின் வரம்பு உட்பட இந்த ஈராண்டு சோதனைத் திட்டம், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் மற்றும் இத்திட்டத்தின் செயல்பாட்டின் அடிப்படையில் மறுஆய்வு செய்யப்படும் என்று ஏவிஎஸ் தெரிவித்தது.

பராமரிப்பாளர்களின் சொந்தப் பூனைகளும் இந்த வரம்பில் அடங்கும். அனைத்துப் பூனைகளும் ஆறு மாத வயதை எட்டும்போது அல்லது தத்தெடுக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் கருத்தடை செய்யப்பட வேண்டும்.

2028 ஜூலை 31ஆம் தேதிவரை இச்சோதனைத் திட்டம் நடப்பில் இருக்கும் காலத்தில், பராமரிப்பாளர்கள் தங்களது பூனைகளுக்கான உரிமத்தை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

அங்கீகரிக்கப்பட்ட பூனைப் பராமரிப்பாளராக விண்ணப்பிக்க விரும்புவோர், பூனைகளைப் பராமரித்த அனுபவம் கொண்டவராகவும் அதற்கான நிதி வசதியும் நேரமும் கொண்டவராகவும் மூவறை அல்லது அதற்கும் பெரிய வீவக வீடுகள் அல்லது தனியார் வீடுகளில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கு முந்தைய ஈராண்டுகளில் தங்களது வசிப்பிடத்தில் புகார்களோ அண்டைவீட்டாருடன் சச்சரவுகளோ இல்லாத நற்பெயரையும் அவர்கள் கொண்டிருக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்