வீவக கார் நிறுத்துமிடங்களில் மின்னூட்டிகள் எண்ணிக்கை 40% அதிகரிப்பு

வீவக கார் நிறுத்துமிடங்களில் மின்னூட்டிகள் எண்ணிக்கை 40% அதிகரிப்பு

3 mins read
கூட்டுரிமை வீடுகளில் குறைவாகவே பொருத்தப்பட்டுள்ளதாகத் தகவல்
25c93935-935f-4428-86df-1268766701a1
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத் தலைமையகத்தின் கார் நிறுத்துமிடத்தில் உள்ள மின்னூட்டிகள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் முழுவதுமுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) கார் நிறுத்துமிடங்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டு இடங்களில் (ஏறத்தாழ 1,000) மின்வாகனங்களுக்கான மின்னூட்டிகள் பொருத்தப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகஸ்ட் 5ஆம் தேதி தெரிவித்துள்ளது.

இது, சென்ற ஆண்டிறுதி (2023) நிலவரத்துடன் ஒப்பிடுகையில் இது ஏறக்குறைய 42 விழுக்காடு அதிகம்.

2023 இறுதியில் சுமார் 700 வீவக கார் நிறுத்துமிடங்களில் மட்டுமே மின்னூட்டிகள் பொருத்தப்பட்டிருந்தன.

இருப்பினும், தனியார் கூட்டுரிமை வீடுகளின் கார் நிறுத்துமிடங்களில் இந்த எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்த ஆண்டிறுதிக்குள் அத்தகைய 20 விழுக்காட்டு கார் நிறுத்துமிடங்களில் மின்னூட்டிகளைப் பொருத்த அதிகாரிகள் இலக்கு வகுத்துள்ளனர்.

மின்னூட்டக் கட்டமைப்பு சீரான வேகத்தில் தொடர்ந்து விரிவடைந்து வருவதாகக் கூறிய ஆணையம் தீவு முழுவதும் தற்போது ஏறத்தாழ 13,800 மின்னூட்டிகள் இருப்பதாகக் கூறியது.

2022ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம்.

2020ஆம் ஆண்டு 1,600 மின்னூட்டிகள் மட்டுமே இருந்தன.

சிங்கப்பூர் பசுமைத் திட்டத்தின்கீழ், 2030ஆம் ஆண்டுக்குள் புதிதாகப் பதிவு செய்யப்படும் கார்கள், டாக்சிகள் அனைத்துமே காற்றை மாசுபடுத்தும் பொருள்களை வெளியேற்றாத எரிபொருளைப் பயன்படுத்துபவையாக இருக்கவேண்டும் என்பது சிங்கப்பூரின் இலக்கு.

அதற்குள் நாடு முழுவதும் 60,000 மின்னூட்டிகளைப் பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வீவக குடியிருப்பு நகர்ப்புறங்கள் அனைத்திலும் அடுத்த ஆண்டிறுதிக்குள் மின்னூட்டிகளைப் பொருத்தும் பணி சீராக நடைபெறுவதாக ஆணையம் கூறியது.

தனியார் குடியிருப்புப் பேட்டைகளில் மின்னூட்டிகளைப் பொருத்துவதில் நிலவும் இடையூறுகள்

‘த குவின்டெட்’ கூட்டுரிமை வீடுகள், சுவா சூ காங்கில் உள்ளன.

அங்கு மின்னூட்டிகளைப் பொருத்துவதில் உள்ள சிரமங்களை எடுத்துரைத்தார் அக்கூட்டுரிமை வீடுகளின் நிர்வாக மன்றத் தலைவர் ஆங் சீ சியோங்.

மின்னூட்டிகளைப் பொருத்துவதற்கான கூடுதல் செலவை ஏற்றுக்கொள்வதற்குக் குடியிருப்பாளர்களை ஒப்புக்கொள்ள வைப்பது சவால்மிக்க பணி என்றார் அவர். ஏனெனில் அங்குள்ள குடியிருப்பாளர்களில் மிகக் குறைவானோரே மின்வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர் என்று அவர் கூறியதாக சிஎன்ஏ தகவல் வெளியிட்டுள்ளது.

ஓரிரு விழுக்காட்டிற்கும் குறைவான குடியிருப்பாளர்களின் நலனுக்காக அனைத்துக் கூட்டுரிமை வீடுகளுக்கான வளங்களைப் பயன்படுத்துவது சிறந்த முடிவாக இருக்காது என்றார் அவர்.

தங்கள் கூட்டுரிமை வீடுகளில் ஏறக்குறைய 3 விழுக்காட்டினரே மின்வாகனங்களைப் பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

அனைத்துக் குடியிருப்பாளர்களையும் திருப்திப்படுத்தும் வகையிலான தீர்வுகளை எட்டுவதற்கு, நிர்வாகம் ஓராண்டு ஆய்வு மேற்கொண்டதாக அவர் சொன்னார்.

கட்டணமின்றி மின்னூட்டிகளைப் பொருத்தும் சேவையை நாடுதல், நிலப் போக்குவரத்து ஆணையத்தின் மின்வாகனப் பொது மின்னூட்டி மானியத்தைப் பயன்படுத்திக்கொள்ளுதல் ஆகியவை அந்தத் தீர்வுகள்.

ஆணையத்தின் மானியம், மின்னூட்டிகளின் கட்டணத்தில் 50 விழுக்காட்டு நிதியை வழங்கும். 90 விழுக்காட்டுக்கும் அதிகமான குடியிருப்பாளர்களின் ஒப்புதலைப் பெற இந்த மானியம் மிகவும் உதவியாக இருந்ததாக திரு ஆங் கூறினார்.

‘த குவின்டெட்’ குடியிருப்பில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், கூட்டுரிமை வீடுகளில் மின்னூட்டிகளைப் பொருத்தும் திட்டத்துக்கு ஆதரவு தரும் நோக்கில் 2023ன் பிற்பகுதியில் விதிமுறை மாற்றம் நடப்புக்கு வந்ததாகக் கூறினார்.

அதன்கீழ், கூட்டுரிமை வீட்டுக் குடியிருப்பாளர்களில் 50 விழுக்காட்டினர் அதற்கு ஆதரவாக வாக்களித்தால் போதுமானது. முன்னர் அந்த விகிதம் 90 விழுக்காடாக இருந்தது.

இந்த ஆண்டின் முற்பாதியில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட கார்களில் மூன்றில் ஒன்று மின்சார கார் என்று தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் தற்போது ஏறக்குறைய 18,000 மின்சார கார்கள் உள்ளன. இது நாட்டின் மொத்த கார் எண்ணிக்கையில் 2.7 விழுக்காடு.

குறிப்புச் சொற்கள்