சிங்கப்பூரில் 2019லிருந்து 2023ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் விவாகரத்து செய்துகொள்ளத் திட்டமிட்ட 15,300க்கும் மேற்பட்ட முஸ்லிம் தம்பதியரில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர், திருமண ஆலோசனை அமர்வுகளுக்குச் (marriage counselling) சென்ற பிறகு சேர்ந்து வாழ முடிவு செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமண ஆலோசனை அமர்வுத் திட்டத்தின்கீழ் (MCP) சம்பந்தப்பட்ட தம்பதியர் அந்த அமர்வுகளுக்குச் சென்றனர். அத்திட்டம் கட்டாயத் திட்டமாகும்.
அத்திட்டத்தில் பங்கேற்றோரில் 80 விழுக்காட்டினர் பலனடைந்தனர் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. அதன் மூலம் திருமண வாழ்வைப் பாதித்த தங்களின் தனிப்பட்ட அம்சங்கள், குணாதிசயங்கள் ஆகியவற்றை நன்கு அறிவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
முஸ்லிம் திருமணங்களைப் பொறுத்தவரை இவை நம்பிக்கை தரும் போக்குகள் என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான மசகோஸ் சுல்கிஃப்லி கூறினார். அண்மைய ஆண்டுகளில், முஸ்லிம் தம்பதியரின் திருமணங்கள் விவாகரத்தில் முடிவது குறைந்து வருகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டில் மொத்தம் 1,200 முஸ்லிம் தம்பதியர் விவாகரத்து செய்துகொண்டனர். இந்த எண்ணிக்கை 2022, 2021ஆம் ஆண்டுகளில் பதிவானதைவிடக் குறைவாகும்.
2022ல் 1,505ஆகவும் 2021ல் 1,767ஆகவும் இந்த எண்ணிக்கை பதிவானது.
“பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டால் அது பிள்ளைகளிடையே நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்; பிள்ளைகள் அந்த நிலைமைக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ள குடும்பங்கள் ஒன்றாக இருப்பது முக்கியம். அந்த வகையில், இத்தகைய புள்ளி விவரங்கள் முக்கியமானவை,” என்று திரு மசகோஸ் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் ஷரியா நீதிமன்றம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் திரு மசகோஸ் கலந்துகொண்டு பேசினார். திருமண ஆலோசனை அமர்வுத் திட்டத்தில் இடம்பெறும் சிறந்த நடைமுறைகளைப் பற்றிக் கலந்துபேச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஷரியா நீதிமன்றம், 1958ஆம் ஆண்டிலிருந்து திருமண ஆலோசனை அமர்வுகளை வழங்கி வருகிறது. திருமண ஆலோசனை அமர்வுத் திட்டம், 2004ஆம் ஆண்டில் அதிகாரபூர்வ திட்டமாக ஆக்கப்பட்டது.

