தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெங்காவில் ஆண்டு இறுதிக்குள் 15,000 வீடுகள்: அமைச்சர் சீ ஹொங் டாட்

2 mins read
97018ffa-8a54-4e41-a179-c8abd038f262
வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் சமூக நாள் நிகழ்ச்சியில் தெங்கா கட்டுமானம் குறித்து தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் பேசினார். அவருடன் முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெங்கா வட்டாரத்தில் கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்ட 30,000 வீடுகளில் கிட்டத்தட்ட 12,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு இறுதிக்குள் திட்டமிட்டதுபோல் ஏறத்தாழ 15,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் சமூக நாளான சனிக்கிழமை (ஜூலை 26) தெங்கா கட்டுமானம் தொடர்பாக அமைச்சர் சீ மேல் விவரங்களை வெளியிட்டார்.

இதுதொடர்பாகத் தெங்கா சமூக மன்றத்தில் அமைச்சர் சீ பேசினார், “புதிய குடியிருப்புப் பேட்டை அமைக்கும்போது அந்த வட்டாரத்தில் உள்ள சமூகத் தலைவர்கள், அடித்தள ஆலோசகர்கள் ஆகியோருடன் கலந்து பேசப்படும். அவர்கள் வட்டார மக்களின் கருத்துகளை முன்வைப்பர். அதன்படி குடியிருப்புப் பேட்டைகளில் வசதிகள் செய்து தரப்படும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு செய்வதன்மூலம் புதிய குடியிருப்பு பேட்டை குறித்தும் அதனுள் இருக்கும் வசதி மேம்பாடுகள் குறித்தும் குடியிருப்பாளர்கள் நன்றாகத் தெரிந்துகொள்வார்கள் என்றும் அமைச்சர் சீ குறிப்பிட்டார்.

“குடியிருப்பு பேட்டைகள் கட்டப்படும்போது கிடைக்கும் கருத்துகள் நல்ல அனுபவத்தைக் கொடுக்கின்றன. அதனால் எதிர்காலத்திலும் புதிய பேட்டைகள் உருவாகும்போது இதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

2019ஆம் ஆண்டு தெங்கா வட்டாரத்தில் வீடு வாங்கிய 6,500க்கும் மேற்பட்டவர்கள் வீவகவில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அதேபோல் 13,000 தெங்கா குடியிருப்பாளர்கள் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

இது அந்த வட்டாரத்தில் புதிதாகப் பேட்டைகள் அமைக்கும்போது பெரிய அளவில் உதவியாக இருந்தன என்று அமைச்சர் சீ தெரிவித்தார்.

“நடைபாதைகளிலும் சைக்கிள் பாதைகளிலும் கூரையிடப்பட்டது தெங்காவாசிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தங்களுக்கு ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு வசதிகள் வேண்டும் என்று அவர்கள் கேட்டனர். அதற்கேற்ப, பாதைகள் கூரையிடப்பட்டன,” என்றார் அமைச்சர் சீ.

தெங்காவில் போக்குவரத்து வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பேட்டையில் உள்ள இடங்களுக்கு மிகவும் வசதியாக அணுக வேண்டியதன் அவசியம் குறித்து குடியிருப்பாளர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டது பற்றி குறிப்பிட்ட திரு சீ, பல முக்கிய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் மேலும் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுகாதார வசதிகள் கட்டப்படும் என்றும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்