கெம்பாங்கான் தொகுதியின் அடித்தளப் பொறுப்புகளை வழக்கறிஞர் அஹமது ஃபிர்தாவுஸ் தாவூத் இனி ஏற்றுக்கொள்வார். அந்தத் தொகுதியின் பொறுப்புகளை இதற்குமுன் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகித்த முன்னாள் தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் பார்த்துக்கொண்டார்.
கடந்த ஆண்டின் பொதுத் தேர்தலில் மாற்று வேட்பாளராக இருந்த ஃபிர்தாவுஸ், செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து கெம்பாங்கான் தொகுதிக்கு இரண்டாவது அடித்தள ஆலோசகராகப் பொறுப்பு வகிப்பார் என்று நாடாளுமன்ற நாயகர் சியா கியென் பெங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பகிர்ந்துகொண்டார்.
அடித்தளப் பணிக்கு ஃபிர்தாவுஸ் புதியவர் அல்ல என்றும் நிச்சயமாக அவரது வருகை அணிக்கு மேலும் வலுசேர்க்கும் என்றும் மரின் பரேட்- பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரான சியா தெரிவித்தார்.
குழுத்தொகுதியின் பிற நாடாளுமன்ற உறுப்பினர்களையும் முக்கிய அடித்தளத் தலைவர்களையும் ஃபிர்தாவுஸ் ஏற்கெனவே சந்தித்திருக்கிறார் என்றும் சியா குறிப்பிட்டார்.
கெம்பாங்கானில் உள்ள மலாய், முஸ்லிம் சமூகம் தொடர்பான விவரங்களில் ஃபிர்தாவுஸ் முக்கியப் பங்கு வகிப்பார் என்றும் அவர் பகிர்ந்துகொண்டார்.
இம்மாதம் 23ஆம் தேதி குடியிருப்பாளர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கட்சியின் தொண்டூழியர்களிடம் ஃபைஷாலின் அடித்தளப் பொறுப்புகளைச் செப்டம்பர் மாதத்திலிருந்து ஃபிர்தாவுஸ் ஏற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத தொண்டூழியர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
கெம்பாங்கானில் நடைபெற்ற தேசிய தினப் பற்றுச்சீட்டு விநியோக நிகழ்ச்சியின் புகைப்படங்களைச் சியா தமது ஃபேஸ்புக்கில் இம்மாதம் 27ஆம் தேதி பதிவிட்டார்.
அதில் குழுத்தொகுதியின் எஞ்சியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஃபிர்தாவுஸ் நின்றுகொண்டிருப்பதைக் காண முடிகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மாற்று வேட்பாளராக இருந்த 42 வயது ஃபிர்தாவுஸ், தேர்தலுக்குப்பின் துணைப் பிரதமர் கான் கிம் யோங்கிற்குக்கீழ் பொங்கோல் தொகுதிக்கு இரண்டாம் அடித்தள ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
தற்போதைக்கு அதே பொறுப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளும் ஃபிர்தாவுஸ், கெம்பாங்கானில் முழுமையாகக் கவனம் செலுத்த அதைக் கைவிடுவார் என்று சியா தெரிவித்தார்.


