அவசர தொலைபேசி எண்ணான 995க்கு வரும் அவசரமற்ற அழைப்புகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆறு மாத சோதனைத் திட்டமாக ‘நர்ஸ்ஃபர்ஸ்ட்’ என்ற அந்த தொலைபேசி சேவை, அவசரமற்ற மருத்துவ சேவைகளைக் கையாளும்.
ஜூன் 1ஆம் தேதியிலிருந்து தொடங்கும் இச்சேவையைப் பயிற்சி பெற்ற தாதியர் நிர்வகிப்பார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு, நோய் அறிகுறிகளுக்கு என்ன செய்ய வேண்டும், தகுந்த சிகிச்சைக்கு எத்தகைய வாய்ப்புகள் இருக்கின்றன என்பன குறித்து தாதியர் வழிகாட்டுவார்கள்.
சுகாதார அமைச்சும் உள்துறை அமைச்சும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் உண்லண்ட்ஸ் ஹெல்த்தும் புதிய சேவையை ஆறு மாதத்திற்கு முன்னோட்டத் திட்டமாக செயல்படுத்தும்.
இதன் மூலம் உடனடி அவசர சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் உடனடியாக சேர்க்க வேண்டியவர்களை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் 995 சேவை கவனிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போன்ற அவசரமற்ற மருத்துவ சேவைகளுக்கு பிரிட்டன், ஜப்பான், டென்மார்க், ஃபின்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக அவசர மருத்துவ சிகிச்சைக்கான தேவை அதிகரித்து வருவதால் குடிமைத் தற்காப்புப் படை அவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டிய நிலையில் உள்ளது.
2024ஆம் ஆண்டில் 995க்கு வந்த 245,000 அழைப்புகளை அது கையாண்டுள்ளது. அதாவது சராசரியாக ஒரு நாளுக்கு 672 அழைப்புகள் வந்துள்ளன. இது, 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 57 விழுக்காடு உயர்வாகும்.
தொடர்புடைய செய்திகள்
நர்ஸ்ஃபர்ஸ்ட் உதவி எண்ணுடன் செய்துகொண்ட பங்காளித்துவத்தின் ஒரு பகுதியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் செல்லப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையும். இதனால் மாரடைப்பு, இதயப் பிரச்சினை, மூச்சுத் திணறல் உள்ளிட்ட உண்மையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு குடிமைத் தற்காப்புப் படை, மருத்துவமனை வளங்களை அதிகம் பயன்படுத்த முடியும். 2022 முதல் நர்ஸ்ஃபர்ஸ்ட் சேவையை உட்லண்ட்ஸ் ஹெல்த் நடத்தி வருகிறது. இதற்கு சுகாதார அமைச்சு நிதியளித்துள்ளது.

