சிங்கப்பூரின் ஐம்பது கட்டடங்களில் குறைவான மின்சாரத்தில் மாற்றுக் குளிரூட்டும் வசதிகள்

சிங்கப்பூரின் ஐம்பது கட்டடங்களில் குறைவான மின்சாரத்தில் மாற்றுக் குளிரூட்டும் வசதிகள்

2 mins read
3d24e56c-a281-4b38-829f-f00fccf16a84
பாய லேபார் கிரீன் அலுவலகக் கட்டடம், மாற்றுக் குளிரூட்டும் முறையைப் பயன்படுத்தும் சிங்கப்பூரின் ஐம்பது கட்டடங்களில் ஒன்று. - படம்: டிபி ஆர்கிடெக்ட்ஸ்
Google News Preferred Icon

வரப்போகும் வெப்பமான நாள்களால் கட்டங்களின் உட்புறங்களில் குளிரூட்டுவதற்கான தேவை அதிகரிக்கவிருக்கிறது. இந்த நிலையில் குளிர்சாதனங்கள் அதிக மின்சக்தியை உறிஞ்சுகின்றன. இவை, புவியை வெப்பமாக்கும் குளிர்பதனப் பொருள்களை வெளியேற்றுகின்றன.

மேலும், சிங்கப்பூரில் ஒரு வணிகக் கட்டடத்தின் மொத்த ஆற்றல் பயன்பாட்டில் 40 விழுக்காடு முதல் 60 விழுக்காடு வரை குளிரூட்டலுக்காகவே பயன்படுத்தப்படுகிறது.

சிங்கப்பூரில் உள்ள கிட்டத்தட்ட 50 கட்டடங்கள், ஊழியர்களின் சௌகரியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் குறைவான மின்னாற்றலில் மாற்றுக் குளிரூட்டல் முறைகளைப் பின்பற்றியுள்ளன.

குளிரூட்டும் சாதனங்களை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருக்காத இந்த மாற்றுக் குளிரூட்டல் தொழில்நுட்பங்கள், ஒரு கட்டடத்தின் குளிரூட்டலுக்கான ஆற்றல் பயன்பாட்டை 48 விழுக்காடு வரை குறைக்கிறது.

கலப்புக் குளிரூட்டல் அதில் ஒன்று. குளிர்சாதனத்தின் வெப்பநிலை 25.5 டிகிரி செல்சியஸ் முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக அமைக்கப்பட்டு, மின்விசிறிகளுடன் இணைக்கப்படுகிறது.

மின்விசிறிகள் காற்று சுழற்சியை அதிகரிக்கின்றன. இது, தோல் வழியாக உடல் வெப்பத்தை எளிதாக வெளியிட உதவுகிறது.

பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவுமின்றி எளிதாகப் பயன்படுத்த முடிவதால் இந்த கலப்புக் குளிரூட்டலே மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மாற்று முறையாகும்.

காஜிமா கார்ப்பரேஷனின் வட்டாரத் தலைமையகமான தி கியர் மற்றும் தெமாசெக் ஷாப்ஹவுஸ் உட்பட இதுவரை 26 கட்டடங்களில் இம்முறை பயன்படுத்தப்படுகிறது.

மற்றொரு முறையில், ஓர் அறையின் கூரையில் உள்ள பலகைகள் மூலம் குளிரூட்ட முடியும். வெப்பம் என்பது இயல்பாகவே வெப்பமான பொருள்களிலிருந்து குளிர்ந்த பரப்புகளுக்கு மாறக்கூடியது.

இந்த முறையில் பலகைகள், குழாய்கள், பரப்புகள் வழியாகக் குளிர்ந்த நீரைச் சுழல வைப்பதன் மூலம் வெப்பத்தை அகற்றி, பரப்புகளின் வெப்பநிலையை அறை வெப்பநிலையை விடக் குறைவாக வைக்கிறது.

செயல்மிகு குளிர்ந்த முறையில், குளிரூட்டலும் காற்றோட்டமும் கூரையில் பொருத்தப்பட்ட ‘ஆக்டிவ் சில்ட் பீம்ஸ்’ எனப்படும் அமைப்புகள் மூலம் வழங்கப்படுகின்றன.

கட்டட, கட்டுமான ஆணையம், 2024இல் மேற்கொண்ட ஓர் ஆய்வில், இந்தப் புதிய குளிரூட்டல் தொழில்நுட்பங்கள் உயர்திறன் கொண்ட பசுமைக் கட்டடங்களில் மின்னாற்றல் சேமிப்பை தற்போதைய 72 விழுக்காட்டிலிருந்து 80 விழுக்காடு வரை உயர்த்த உதவும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆய்வைத் தொடர்ந்து, ராஃபிள்ஸ் பிளேசில் வரவிருக்கும் ‘தி கிளிஃபோர்ட்’ (The Clifford) என்ற அலுவலகக் கோபுரம், அதன் சில்லறை வணிகப் பகுதிக்காக மற்றொரு குளிரூட்டல் முறையைச் சோதிக்கவுள்ளது. இந்த முறை ‘பாசிவ் டிஸ்பிளேஸ்மென்ட் கூலிங்’ என்று அழைக்கப்படுகிறது. இது, வெப்பமான காற்று இயற்கையாக அதிகரிப்பதை அடிப்படையாகக் கொண்டது.

மேற்கூரைக்கு அருகில் உள்ள குளிரூட்டும் சுருள்கள் வெப்பமான காற்றைக் குளிரச் செய்யும். பின்னர், அது, தரையை நோக்கி இறங்கும். இது ஒரு தொடர்ச்சியான சுழற்சியை உருவாக்குகிறது.

சிங்கப்பூரில் சில்லறை வணிகப் பகுதிக்காக இத்தகைய குளிரூட்டல் தொழில்நுட்பத்தை சோதிப்பது இதுவே முதல்முறை. பிற இடங்களில் அலுவலகங்களிலும் வகுப்பறைகளிலும் இது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்