‘தி மீட் பிரதர்ஸ்’ மூலம் குர்பான் சடங்கை நிறைவேற்ற இருந்தோர்க்கு மாற்று வழிகள்

‘தி மீட் பிரதர்ஸ்’ மூலம் குர்பான் சடங்கை நிறைவேற்ற இருந்தோர்க்கு மாற்று வழிகள்

2 mins read
e82ad6bf-df15-479b-aed1-3f6feeecee34
2024 ஜூன் 15ஆம் தேதி, பெர்தாப்பிஸ் மறுவாழ்வு இல்லத்தில் குர்பான் சடங்கிற்காக வரவழைக்கப்பட்ட ஆடுகள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உள்ளூர் நிறுவனமான ‘தி மீட் பிரதர்ஸ்’ மூலம் இந்த ஆண்டு குர்பான் சடங்கை நிறைவேற்றத் திட்டமிட்டிருந்த முஸ்லிம்களிடம் அவர்கள் செலுத்திய கட்டணத்தை முழுமையாகத் திரும்பத் தருவது, அல்லது வெளிநாடுகளில் ஆடுகளை அறுப்பது உள்ளிட்ட மாற்று வழிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் நடைபெறும் குர்பான் சடங்கிற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து ஆடுகளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான அனுமதியை ஆஸ்திரேலிய அதிகாரிகளிடமிருந்து இன்னும் பெறாததால், குறிப்பிட்ட காலத்திற்குள் அவற்றைச் சிங்கப்பூருக்குக் கொண்டுவர தன்னால் இயலவில்லை என்று தி மீட் பிரதர்ஸ் நிறுவனம் சனிக்கிழமை (மே 23) தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த மாற்று ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

“தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளும்போது, ஆடுகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் சிங்கப்பூருக்குக் கொண்டு வருவது சாத்தியமில்லை என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது,” என்று அந்நிறுவனம் கூறியது.

இந்த ஆண்டு சிங்கப்பூரில் ஹஜ்ஜுப் பெருநாள் புதன்கிழமை (மே 27) இடம்பெறுகிறது.

முன்னதாக, தி மீட் பிரதர்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி அனுமதி இன்னும் நிலுவையில் இருப்பதாகவும், இதனால் சில பள்ளிவாசல்களில் குர்பான் சடங்கிற்காக உயிருள்ள ஆடுகள் ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு தருவிக்கப்படுவது தாமதமாகலாம் என்றும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) மே 21ஆம் தேதி வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இங்கு 400 ஆடுகள் கொண்டு வரப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், சுவா சூ காங்கில் உள்ள அல் ஃபிர்தவ்ஸ் பள்ளிவாசல், பெத்தம்பட்டான் மலாயு செம்பவாங் பள்ளிவாசல், லிம் சூ காங்கில் உள்ள புசாரா அமான் பள்ளிவாசல் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இதர விநியோகிப்பாளர்களைக் கொண்டுள்ள சைனாடவுனின் ஜாமிஆ சூலியா பள்ளிவாசலும் இதனால் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரையும் தாங்கள் நேரடியாகத் தொடர்புகொண்டு, முழுக் கட்டணத்தையும் திரும்பத் தருவது உள்ளிட்ட மாற்றுத் தெரிவுகளை வழங்கவுள்ளதாக தி மீட் பிரதர்ஸ் தெரிவித்தது.

குர்பான் சடங்கைத் தொடர விரும்புவோர், ஆஸ்திரேலியாவில் அதை நிறைவேற்றலாம். அதன் பின்னர், குர்பான் இறைச்சி அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.

அல்லது, இந்தோனீசியாவின் மேடான் நகரில் குர்பான் சடங்கை நிறைவேற்ற விருப்பம் தெரிவிக்கலாம். அங்குப் பெறப்படும் குர்பான் இறைச்சி, வசதி குறைந்தோருக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

மாற்றப்பட்ட விலை விவரங்கள் அல்லது கட்டணத்தைத் திரும்பத் தரும் வழிமுறைகள் குறித்த கூடுதல் விவரங்கள் தெரியப்படுத்தப்படும் என்று ‘தி மீட் பிரதர்ஸ் கூறியது.

“எங்கள் தரப்பில் ஏற்பட்ட அனைத்துக் குறைபாடுகளுக்கும் நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்,” என்றும் அது சொன்னது.

குறிப்புச் சொற்கள்