அவசர உதவி வாகனங்களின் முன்னுரிமையில் மாற்றம்

அவசர உதவி வாகனங்களின் முன்னுரிமையில் மாற்றம்

2 mins read
650249fa-481e-46a5-bea4-b1055acd71b4
இந்தப் புதிய மாற்றம் ஜூலை 31ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அவசரம் இல்லாத மருத்துவச் சம்பவங்களுக்காக அவசர உதவி வாகனத்தை அழைப்பவர்கள் இனி 20 நிமிடங்கள் வரையாவது காத்திருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை (ஜூலை 4) அன்று நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடந்த வேலைத்திட்ட கருத்தரங்கில் இந்தத் தகவலை குடிமைத் தற்காப்புப் படை வெளியிட்டது.

இந்த புதிய மாற்றம் ஜூலை 31ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அது தெரிவித்துள்ளது.

சிறு தீக்காயம், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது போன்ற உயிருக்கு உடனடி ஆபத்து இல்லாத சம்பவங்களுக்காக மருத்துவ உதவி கேட்டு 995 என்ற எண்ணுக்கு அழைப்பவர்களுக்கு இது பொருந்தும்.

“தற்போதைய நிலவரப்படி நாள் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 12 அழைப்புகள் அவசரம் இல்லாத மருத்துவச் சம்பவங்களுக்காக வருகின்றன. இவ்வகையான சம்பவம் ஒவ்வொன்றுக்கும் சராசரியாக 75 நிமிடங்கள் அவசர உதவி வாகனங்களின் சேவை தேவைப்படுகிறது,” என்று குடிமைத் தற்காப்புப் படை விளக்கியது.

இந்தப் புதிய நடவடிக்கை மூலம் மாரடைப்பு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு உதவ அவசர உதவி வாகனத்தை அழைப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், மனித வளத்தையும் பொருள் வளத்தையும் சிறப்பாகக் கையாள இது உதவும் என்று நம்பப்படுகிறது.

நோயாளிகளின் பாதுகாப்பிற்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும் என்பதையும் குடிமைத் தற்காப்புப் படை தெளிவுபடுத்தியது.

அவசரம் இல்லாத மருத்துவச் சம்பவங்களுக்காக அவசர உதவி வாகனத்தை அழைப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2021ஆம் ஆண்டு 9,050 அழைப்புகள் வந்தன. 2022ஆம் ஆண்டு அது 11,538ஆக அதிகரித்தது.

தசை பிடிப்பு, இருமல், பல் வலி போன்ற மருத்துவச் சம்பவங்களுக்காக அவசர உதவி வாகன சேவை வழங்கப்படாது என்பதை குடிமைத் தற்காப்புப் படை நினைவூட்டியது.

குறிப்புச் சொற்கள்