தேசிய சமூகச் சேவை மன்ற உறுப்பினர் விதிமுறையில் திருத்தம்

2 mins read
9db2e46a-c16e-4229-b586-41d1ced7733e
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) உரையாற்றுகிறார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

தேசிய சமூகச் சேவை மன்றத்தில் (NCSS) உறுப்பினராக விரும்பும் அமைப்புகளுக்கான விதிமுறைகளில் சட்டத் திருத்தம் செய்யப்படவுள்ளது என சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) தெரிவித்தார்.

சமூகச் சேவை என்பது பலதரப்பட்ட, பன்முகத் தன்மையுடன் வளர்ந்துவரும் சூழலில், அதன் தேவைகளைத் தகுந்த வகையில் ஆராய்ந்து செயல்படவேண்டியதன் முக்கியத்துவம் பற்றி அமைச்சர் விளக்கினார்.

மன்றத்தின் சட்டத் திருத்தங்கள், அடிப்படையில் சமூக சேவைகள் வழங்கும் அல்லது நேரடியாக சமூகச் சேவைகளில் ஆதரவு வழங்கும் அமைப்புகளுக்குப் பொருந்தும்.

கடந்த 2022ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தின் முழு நிதி உதவியுடன் தேசிய சமூகச் சேவை மன்றம் செயல்படுகிறது. எனவே இந்தச் சட்டத் திருத்தங்கள், சமூக சேவைத் துறையை மேலும் மேம்படுத்தும் மன்றத்தின் விரிவடைந்துள்ள பொறுப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைகின்றன.

தற்போது மூன்று நிலைகளில் உள்ள உறுப்பினர் தகுதிபெறும் முறை திருத்தப்பட்டு, ஒரே தகுதித் தரநிலை செயல்படுத்தப்படும். உறுப்பினர் கட்டணம் வசூலிக்கப்படாது.

ஆகையால் பெரும்பான்மையாக இருக்கும் பல தற்கால முழுநிலை உறுப்பினர்கள் திருத்தத்தால் பாதிப்படையாமல், உறுப்பினர் தகுதியை அவர்கள் தக்கவைத்துக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

உறுப்பினர் அல்லாதோர், மன்றத்தின் இலக்குகளுக்கு உடன்பட்டு செயல்படும்போது, மானியங்களுக்கு தகுதி பெறுவார்கள்.

தேசிய சமூக சேவை மன்றத்தின் மேலாண்மைக் குழுவினரை, அமைச்சர் நியமிப்பார். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் துறை சார்ந்தோரால் தேர்வு செய்யப்பட்டு புதிய விதியின்படி, 15 முதல் 27 உறுப்பினர்கள் அக்குழுவில் பணியாற்றத் தகுதி பெறுவர்.

இதன்படி தேவையான நிபுணத்துவம் பெற்ற பலதரப்பட்டோர் மேலாண்மைக் குழுவில் பிரதிநிதிக்கப்படுவது உறுதிசெய்யப்படும்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின்கீழ் ஆணைபெற்ற கழகமாகச் செயல்படும் தேசிய சமூக சேவை மன்றம் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த மாற்றங்களைச் செயல்படுத்தவுள்ளது.

அதற்கான மசோதா செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே, தேசிய சமூக சேவை மன்றத்தின் புதிய விதிமுறைகளால் அதன் உறுப்பினர்களாக சில அமைப்புகள் தொடரமுடியாது.

உறுப்பினர்களிடமும் பொதுமக்களிடமும் கருத்துகள் சேகரிக்கப்பட்ட பிறகு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மன்றம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
சமூக மேம்பாட்டு மன்றம்சமூக சேவைநாடாளுமன்றம்சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு