வெளிநாட்டுச் சக்திகளின் தீய ஆதிக்கத்திற்கு ஆளாகக் கூடிய சாத்தியமுள்ள இன அடிப்படையிலான அமைப்புகள் பட்டியலிடப்படும் என்று உள்துறைக்கான இரண்டாவது அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
சீன, மலாய், இந்திய இனங்களுடன் தொடர்புடைய குலமரபுச் சங்கங்களையும் வணிகக் கூட்டமைப்புகளையும் அரசாங்கம் முதலில் பட்டியலிடும் என்று அமைச்சர் டோங் கூறினார்.
வெளிநாட்டு நிதியுதவி, சார்பு ஆகியவற்றை இந்த அமைப்புகள் வெளிப்படுத்தவேண்டும் என்றும் தலைமைத்துவ அமைப்புசார்ந்த தகுதி நிலைகளையும் அந்த அமைப்புகள் எட்டவேண்டும் என்றும் திரு டோங் கூறினார்.
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) நடைபெற்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது இதனைத் தெரிவித்த அமைச்சர் டோங், இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் இந்த விதிமுறைகள் 2026ன் முடிவுக்குள் செயல்படுத்தப்படும் எனக் கூறினார்.
“கண்டுபிடிப்பதற்கு மேலும் அரிதாகி வரும், நுட்பமாகிவரும் வெளிநாட்டுத் தலையீட்டு உத்திகளுக்கு எதிராக நாங்கள் நம்மைத் தற்காத்துக் கொள்ளவேண்டும்,” என்றார் திரு டோங்.
பகைமைப் போக்கை வளர்க்கும் பிரசாரங்களை முன்னெடுக்கும் உண்மையற்ற இணையத் தளங்களை உதாரணமாகச் சுட்டிய திரு டோங், வெளிநாட்டுத் தரப்புகளால் உருவாக்கப்பட்ட அத்தகைய 10 இணையத்தளங்கள் 2024ல் அடையாளப்படுத்தப்பட்டதாகக் கூறினார்.
அத்தகைய தளங்களுக்கு எதிராக முன்கூட்டியே செயல்படுவதற்கு ஃபிக்கா எனப்படும் வெளிநாட்டுத் தலையிட்டுக்கு எதிரான சட்டங்களுக்கு மாற்றங்கள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் பகைமையைத் தூண்டும் பிரசாரத்தை அத்தகைய தளங்கள் செய்வதற்கு முன்பாகவே அறிகுறிகளின்வழி கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க இந்நடவடிக்கை வகைசெய்யும் என்று அமைச்சர் டோங் குறிப்பிட்டார்.

