சிங்கப்பூர்ப் பொருள்களுக்கான 20% புதிய வரியைக் குறைக்க அமெரிக்கா பரிசீலனை

சிங்கப்பூர்ப் பொருள்களுக்கான 20% புதிய வரியைக் குறைக்க அமெரிக்கா பரிசீலனை

படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

26 Nov 2026 - 2:07 pm

2 mins read

அதிக உற்பத்தித்திறன் தொடர்பாகச் சிங்கப்பூர் உட்பட 14 வர்த்தகப் பங்காளிகளின் பொருள்கள்மீது 20 விழுக்காடு வரையிலான புதிய வரி விதிக்க அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.

ஆயினும், இருதரப்பு வர்த்தக உடன்பாடு எட்டப்பட்டால் அவ்வரியை 10 விழுக்காடாகக் குறைக்கப் பரிசீலிப்பதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் புதன்கிழமை (நவம்பர் 25) தெரிவித்துள்ளார்.

உடன்பாடு எட்டப்படாவிட்டால், 2027 தொடக்கத்தில் புதிய வரி நடப்புக்கு வரக்கூடும். எனினும், கட்டாய உழைப்பு தொடர்பாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 12.5 விழுக்காட்டு வரி கழிக்கப்படுவதால் உண்மையான வரிச்சுமை குறையும். இது குறித்த எழுத்துபூர்வக் கருத்துகளை 2027 ஜனவரி 5ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். ஜனவரி 25ஆம் தேதி பொது விசாரணை நடைபெறும்.

கடந்த மார்ச் மாதம் 16 வர்த்தகப் பங்காளிகள்மீது தொடங்கிய ஆய்வின் அடிப்படையில் அமெரிக்கா 168 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரின் உற்பத்தி 2030 திட்டம், ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைப்பு 2030 திட்டம் ஆகியவற்றை அது சுட்டிக்காட்டியுள்ளது.

மின்னணு, பகுதிமின்கடத்தி, சுகாதாரம், பெட்ரோலிய வேதிப்பொருள் துறைகளுக்கான நிதி ஆதரவையும் சீனா போன்ற நாடுகளின் முதலீடுகளையும் அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவுடன் வர்த்தக உபரி இல்லை எனச் சிங்கப்பூர் தொடர்ந்து மறுத்து வருகிறது. 2025ல் சிங்கப்பூருடனான வர்த்தகத்தில் அமெரிக்கா US$33 பில்லியனுக்கும் (S$42 பி.) அதிகமான உபரியைப் பெற்றதாக எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சு தெரிவித்தது. இவ்விவகாரம் குறித்து அமைச்சிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மூன்றாவது பெரிய ஆசிய முதலீட்டாளரான சிங்கப்பூர், 350,000 அமெரிக்க வேலைகளுக்கு ஆதரவளிக்கிறது. சிங்கப்பூரில் 6,600 அமெரிக்க நிறுவனங்களும், அமெரிக்காவின் 45 மாநிலங்களில் 250க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் நிறுவனங்களும் தளவாடம், வேளாண்மை, விண்வெளி, கப்பல் கட்டும் துறைகளில் செயல்படுகின்றன.

ஆண்டுக்கு 1.4 டிரில்லியன் வெள்ளி பொருள் வர்த்தகம் உட்பட மொத்தம் 2.5 டிரில்லியன் வெள்ளி வர்த்தகம் கொண்ட சிங்கப்பூர், அமெரிக்காவுடன் கவனமாகப் பேச்சுவார்த்தை நடத்தி நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் உதவும் எனத் துணைப் பிரதமர் கான் கிம் யோங் முன்னதாகக் கூறியிருந்தார்.

எஃகு, அலுமினியம், செம்பு, வாகனப் பாகங்களுக்கு ஏற்கெனவே 25 முதல் 50 விழுக்காடுவரை அமெரிக்கா வரி விதிக்கிறது. மெக்சிகோ, நார்வே தவிர்த்து சீனா, இந்தியா, மலேசியா, இந்தோனீசியா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, வியட்னாம், பங்ளாதேஷ், கம்போடியா, சுவிட்சர்லாந்து, தைவான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 13 தரப்புகளும் புதிய வரியால் பாதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்அமெரிக்காவரி