தேசிய சேவை தொடர்பான கடமைகளை நிறைவேற்றத் தவறிய குற்றச்செயல்களுக்காக அமெரிக்கக் குடிமகன் ஒருவருக்கு ஒன்பது வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேரட் அலெக்சாண்டர் கான் கொக் லெங், 40, அமெரிக்காவில் பிறந்தார். அவரது வாழ்க்கையின் பெரும்பாலான நேரம் அவர் அங்குதான் வசித்து வந்ததாக அவரது வழக்கறிஞர் டேனி குவா கூறினார்.
அவரது தந்தை சிங்கப்பூரர் என்பதால், வழித்தோன்றலைப் பொறுத்தவரை அவர் சிங்கப்பூர் குடிமகன் என்று அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டார்.
வெளிநாடுகளில் நீண்டகாலம் தங்கியிருப்பதற்குத் தேவைப்படும் செல்லுபடியான அனுமதி அட்டை இல்லாமல், மூவாண்டுகளுக்கும் மேல் சிங்கப்பூருக்கு வெளியே இருந்ததற்காகத் தம்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை கான் ஒப்புக்கொண்டார்.
மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
2006ஆம் ஆண்டில், தனது அமெரிக்கக் குடியுரிமையை ரத்துசெய்யாததாலும், பற்றுறுதி உறுதிமொழியை எடுக்காததாலும், கான் தனது சிங்கப்பூர் குடியுரிமையை இழந்துவிட்டதாக அவரது வழக்கறிஞர் கூறினார்.
கான் தானாகவே முன்வந்து சரணடையவில்லை என்று அரசு தரப்புத் துணை வழக்கறிஞர் திமோதியுஸ் கோ கூறினார்.
கான் இவ்வாண்டு ஜனவரி 22ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.