அமெரிக்க உயர்கல்வி: சிங்கப்பூர் மாணவர்களிடையே தொடரும் ஆர்வம்

அமெரிக்க உயர்கல்வி: சிங்கப்பூர் மாணவர்களிடையே தொடரும் ஆர்வம்

2 mins read
7ec6f352-7fea-4d77-acac-8041ae706c39
2025 ஆகஸ்ட்டில், புதிய பரிமாற்று மாணவர்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வருடாந்தர வரவேற்பு நிகழ்ச்சியின் போது, ​​அமெரிக்காவின் யூசி பெர்க்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் 22 வயதான மாணவர் அர்ஷுல் கார்க் (வலமிருந்து மூன்றாவது), அப்பல்கலைக்கழகத்தின் சிங்கப்பூர் மாணவர் சங்க உறுப்பினர்களுடன். - படம்: அர்ஷுல் கார்க்

அமெரிக்காவில் அனைத்துலக மாணவர்களுக்கான விசா மற்றும் குடிநுழைவு விதிகள் அண்மைக்காலமாகக் கடுமையாக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், சிங்கப்பூர் மாணவர்கள் உயர்கல்விக்காக அமெரிக்கப் பல்கலைக்கழகங்களையே தொடர்ந்து தேர்வு செய்து வருகின்றனர்.

உலகத் தரம் வாய்ந்த கற்றல் சூழல், உயர்மட்ட ஆராய்ச்சி வாய்ப்புகள் மற்றும் சிறந்த வேலைவாய்ப்புச் சாத்தியக்கூறுகள் ஆகியவை இதற்கு முதன்மைச் சான்றுகளாக அமைகின்றன.

அமெரிக்கக் கல்வித் துறையில் அண்மையில் கொண்டுவரப்பட்ட விதிமுறைகளின்படி, விசா விண்ணப்பங்களைச் சோதிக்கும் நடைமுறைகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, மாணவர் விசாக்களுக்கான தங்கும் கால அளவு வரையறுக்கப்பட்டு உள்ளது.

மேலும், படிப்பை மாற்றிக்கொள்வதற்கும் கல்வி நிலையங்களை மாற்றுவதற்கும் பல்வேறு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இவை தவிர, சமூக ஊடகப் பக்கங்களைத் தீவிரமாகக் கண்காணிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தகைய கடுமையான விசா கட்டுப்பாடுகளால் பல நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக மாணவர் சேர்க்கையில் சற்றுத் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சிங்கப்பூரிலிருந்து அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

சில முன்னணி வெளிநாட்டுக் கல்வி ஆலோசனை அமைப்புகளின் தரவுகளின்படி, சிங்கப்பூர் மாணவர்களின் விண்ணப்பங்கள் தொடர்ந்து நிலையாகவே உள்ளன.

சிங்கப்பூர் மாணவர்கள் தங்கள் உயர்கல்வியை முடித்தவுடன் பெரும்பாலும் தாய்நாடு திரும்புவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால், அமெரிக்காவின் கடுமையான குடிநுழைவுக் கட்டுப்பாடுகள் தங்களைப் பெரிதும் பாதிக்காது என்று அவர்கள் கருதுகின்றனர்.

மேலும், ஹார்வர்ட் மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகம் போன்ற முன்னணி பல்கலைக்கழகங்களில் படிக்கும் சிங்கப்பூர் மாணவர்கள், தேவையற்ற அரசியல் ஆர்ப்பாட்டங்களைத் தவிர்த்துத் தங்களது கவனத்தைப் படிப்பில் மட்டுமே செலுத்துகின்றனர்.

அமெரிக்கப் பல்கலைக்கழகப் பட்டங்கள் உலகம் முழுவதும் பரவலாக அங்கீகரிக்கப்படுகின்றன. தொழில்துறை நிறுவனங்களுடன் வலுவான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள அமெரிக்க உயர்கல்வி சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.

இதனால், விசா கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைச் சவால்கள் அதிகரித்த போதிலும், சிங்கப்பூர் மாணவர்களிடையே அமெரிக்கக் கல்வியின் பிரபலமும் ஈர்ப்பும் குறையாமல் நீடித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
மாணவர்கள்விசாபட்டங்கள்உயர்கல்வி