சிங்கப்பூரின் அறிவியல், தொழில்நுட்பத் துறைகளுக்குப் பங்களித்த அமெரிக்கப் பேராசிரியர் ஒருவருக்கு சிங்கப்பூர் திங்கட்கிழமையன்று கௌரவக் குடியுரிமை வழங்கிச் சிறப்பித்தது.
அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பில் (ஏ*ஸ்டார்) மருந்துப் பொருள் மேம்பாட்டு நிலையத்தை வழிநடத்தும் நிர்வாக ஆட்சிக் குழுவின் இணைத் தலைவரான 75 வயது பேராசிரியர் வில்லியம் சின்னை, இஸ்தானாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பித்தார்.
சிங்கப்பூரர் அல்லாத ஒருவர் நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் ஆற்றும் தலைசிறந்த பங்களிப்புகளுக்காக சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கும் ஆக உயரிய அங்கீகாரமே கௌரவக் குடியுரிமை.
அதனைப் பெற்றவர்களுக்கும், அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் சிங்கப்பூரில் வசிப்பதற்கும் வேலை செய்வதற்குமான உரிமையை அது வழங்குகிறது.
இந்தச் சிறப்பிப்பு, முதன்முதலாக 2003ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
1980களில் முதன்முதலில் சிங்கப்பூர் வந்த பேராசிரியர் சின், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியில் மருத்துவராகச் சேர்ந்தார். அதன் பிறகு, 2011ஆம் ஆண்டில் அவர் ஏ*ஸ்டார் நிர்வாகக் குழுவில் சேர்ந்தார்.
சுகாதார, உயிர்மருத்துவ அறிவியல் சார்ந்த திட்டங்கள் குறித்து ஏ*ஸ்டார் அமைப்புக்கும் சிங்கப்பூரின் ஆய்வு, புத்தாக்க, தொழில்முனைப்புக் கட்டமைப்புக்கும் பேராசிரியர் சின் ஆலோசனை வழங்கி, முக்கியப் பங்காற்றியதாக ஏ*ஸ்டார் தெரிவித்தது.

