வாஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த குறி கியூபாதான் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
கம்யூனிசக் கொள்கைகளில் செயல்படும் அந்தத் தீவு கூடிய விரைவில் வீழவிருக்கிறது என்றார் அவர்.
ஈரானுக்கு எதிரான போரை அடுத்து கியூபாவுக்கான ‘திட்டம்’ ஒன்றில் கவனம் செலுத்தப்போவதாகத் திரு டிரம்ப் கூறினார். அதனை அடுத்து கியூபா, அமெரிக்காவுடன் உடன்பாடு செய்துகொள்ள தீவிரமாகச் செயல்படுவதாக சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு அளித்த தொலைபேசிவழி நேர்காணலில் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
கியூபாமீது இந்த முறை அதிகக் கவனம் செலுத்த முயல்வதாகக் குறிப்பிட்ட திரு டிரம்ப், 50 ஆண்டுகளுக்குப் பிறகு அது இணக்கம் காண தயாராக இருக்கிறது என்றார்.
“வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ கியூபாவின் முன்னணித் தலைவராக இருப்பார்,” என்று திரு டிரம்ப் தெரிவித்தார்.
முன்னாள் வெனிசுவேலா தலைவர் நிக்கலஸ் மதுரோவின் ஆட்சியைக் கவிழ்த்ததை அடுத்து, கியூபாவில் கால்பதிப்பது பற்றி திரு டிரம்ப்பும் கியூபாவைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த திரு ரூபியோவும் பலமுறை வெளிப்படையாகப் பேசியுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சின் கியூபா விவகாரத்துக்கான ஒருங்கிணைப்பாளர் திரு ராப் அலிசனும் கியூபாவில் உள்ள கத்தோலிக்க ஆலயத்தின் மூத்த பிரதிநிதிகளைச் சந்தித்ததாக அங்குள்ள அமெரிக்கத் தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
அவர்கள், கியூபாவுக்கு அமெரிக்கா அனுப்பிய மனிதநேய உதவிகள் பற்றியும் கியூபாவின் நிலை முன்னேற மாற்றம் தேவை என்பதுபற்றியும் கலந்துரையாடினர்.
தொடர்புடைய செய்திகள்
கியூபாவின் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் வீழ்ச்சியடையும் நிலையில்தான் இருக்கிறது என்று திரு டிரம்ப் தொடர்ந்து கூறிவருகிறார். அதை விரைவுபடுத்தும் வகையில் கியூபாமீது அவர் எரிசக்தித் தடை ஒன்றை விதித்தார்.
இவ்வாண்டு ஜனவரி 9ஆம் தேதியிலிருந்து கியூபாவுக்கு எந்த எண்ணெய்யும் இறக்குமதி செய்யப்படவில்லை. அதன் விளைவாக விமானச் சேவைகள் ரத்தாகின, விமான நிறுவனங்கள் முடங்கின.
ஏற்கெனவே தனது பொருளியல் வலுவிழந்துள்ள நிலையில் மேலும் நெருக்கடி தரவே திரு டிரம்ப் அவ்வாறு செய்ததாகக் கியூபா சாடியது.
இருப்பினும், கியூபாவில் உள்ள தனியார் நிறுவனங்களின் செயல்பாட்டுக்கு மட்டும் எண்ணெய்த் தடையைத் திரு டிரம்ப் சிறிதளவு தளர்த்தினார்.

