ஜோகூர் பாரு போட்டிக்கிடையே, சிங்கப்பூர் அழகுப் பராமரிப்பு நிலையங்கள் மதிப்பு கூட்டு சேவைகளை அதிகரிக்கின்றன

ஜோகூர் பாரு போட்டிக்கிடையே, சிங்கப்பூர் அழகுப் பராமரிப்பு நிலையங்கள் மதிப்பு கூட்டு சேவைகளை அதிகரிக்கின்றன

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

06 Oct 2026 - 5:44 pm

2 mins read

குறைவான விலைகள் மூலம் நீண்ட காலமாகவே சிங்கப்பூர் வாடிக்கையாளர்களை ஜோகூர் பாருவில் (ஜேபி) உள்ள அழகுப் பராமரிப்பு நிலையங்கள் ஈர்த்து வருகின்றன. 2027ல் ஜோகூர் பாரு–சிங்கப்பூர் ரயில் இணைப்புச் சேவை திறக்கப்படும்போது இந்த ஈர்ப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உட்லண்ட்ஸ் நார்த்துக்கும் புக்கிட் சாகருக்கும் இடையேயான பயணம் சில நிமிடங்களில் முடிவதால், இந்தப் புதிய சேவையானது சிங்கப்பூர் பயனீட்டாளர், ஆண்டுக்கு 51 விழுக்காடு அதிகமான முறை ஜோகூர் பாருவுக்குச் சென்று வர வழிவகுக்கும். மேலும், அழகுப் பராமரிப்பு சேவைகள் வாடிக்கையாளர்கள் அதிகம் செலவு செய்யும் பிரிவுகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளதாக ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.

இதை எதிர்பார்த்து, இங்குள்ள சில அழகு நிலையங்கள், தங்களின் கடை அனுபவத்தை மேம்படுத்தவும், சேவைகளை நேரடியாக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளன. இந்த வசதியும் சேவையின் தரமும் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள உதவும் என அவை நம்புகின்றன.

இதற்கு ஓர் உதாரணம், சிங்கப்பூரில் உள்ள ‘பீச்சி ஸ்கின் பார்’ என்ற முக அழகுப் பராமரிப்பு நிலையம். இது, $180 முதல் $500 வரையிலான விலையில் முக சிகிச்சைகளை வழங்குகிறது.

“விலையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு போட்டியிடுவதற்குப் பதிலாக, சிங்கப்பூர், ஜோகூர் பாருவில் உள்ள மற்ற போட்டியாளர்களிடமிருந்து எனது முக அழகு வணிகத்தை வேறுபடுத்திக் காட்டுவதற்கான வழிகளை நான் கண்டறிந்து வருகிறேன்,” என்று அதன் உரிமையாளர் கிரிஸ்டல் லீ கூறினார்.

சிங்கப்பூரில் நான்கு நிலையங்களைக் கொண்டுள்ள ‘பெர்க்கி லேஷ்’ எனும் கண் இமை அழகு நிலையம், 2024ஆம் ஆண்டு முதல் ஜோகூர் பாரு சிட்டி ஸ்குவேர் கடைத் தொகுதியில் ஒரு கிளையை நடத்தி வருகிறது.

“எங்கள் சிங்கப்பூர் கிளைகளைவிட, ஜேபி கிளையில் விலைகள் 20 முதல் 30 விழுக்காடு குறைவாக உள்ளன,” என்று அதன் நிறுவனர் ஜாஸ்மின் டே கூறினார். மேலும், தங்கள் வாடிக்கையாளர்களில் 80 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் மாதத்தில், சிங்கப்பூரில் ‘வீட்டுக்குச் சென்று சேவை வழங்கும்’ திட்டத்தை அது தொடங்கியது. இதன் மூலம் ஊழியர்கள் வீடுகள், அலுவலகங்கள், மருத்துவமனைகளுக்குச் சென்றுகூட கண் இமை தொடர்பான சேவைகளை வழங்குகின்றனர்.

இதுபோல், சிங்கப்பூரில் உள்ள அழகு நிலையங்கள் போட்டித்தன்மையை எதிர்கொள்ள தங்கள் சேவைகளுக்குப் புத்துயிர் ஊட்டி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்
அழகுஜோகூர் பாருசேவைபயனீட்டாளர்