சிஙகப்பூரில் வசிப்பவர்கள் பொதுவாக ஆரோக்கியமாகவும், அதிக உடல்நல உணர்வுடனும் திகழ்ந்து வருகின்றனர். சில பெரிய நோய்களின் பரவல் குறைந்து அல்லது நிலைபெற்றுள்ளது.
அதே நேரத்தில் சுகாதாரப் பரிசோதனை விகிதங்களும் உடல் செயல்பாட்டு அளவுகளும் கொவிட்-19 சுகாதாரச் சரிவிலிருந்து மீண்டு வந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், உடல் பருமன் விகிதமும் மோசமான மனநலமும் அவசரமான, ஒருங்கிணைந்த கவனத்தை ஈர்க்கின்றன,” என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங், அக்டோபர் 17 அன்று கூறினார். இந்தப் பிரச்சினை, குறிப்பாக வயது குறைந்த பெரியவர்களுக்கு வரும்போது அதிக கவனம் தேவைப்படுகிறது.
அண்மைய தேசிய மக்கள்தொகை சுகாதார ஆய்வின்படி, 2023-2024ஆம் ஆண்டில் உடல் பருமன் விகிதம் 12.7 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 10.5 விழுக்காட்டிலிருந்து அதிகரித்துள்ளது. 18 முதல் 29 வயதுடையவர்களிடையே இந்த விகிதம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. அதே காலகட்டத்தில் 6.6 விழுக்காட்டிலிருந்து 11.6 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
ஆகக் கடைசி ஆய்வு முடிவுகளைப் பகிர்ந்துகொண்ட அமைச்சர் ஓங், “இது அதிக பரபரப்பான. அதிக உடல் உழைப்பு இல்லாத, மின்னிலக்க முறையில் இயக்கப்படும் நவீன வாழ்க்கை முறைகள் உடல்நல அபாயங்களை எவ்வாறு அதிகரிக்கின்றன என்பதற்கான கவலையளிக்கும் அறிகுறியாகும்,” என்று சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்களின் 25வது ஆண்டு விழாவில் பேசியபோது குறிப்பிட்டார்.
இதற்கிடையே, சுமார் 15 விழுக்காட்டு குடியிருப்பாளர்கள் மோசமான மனநலத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். 18 முதல் 29 வயதுடையவர்களில் இந்த விகிதம் நான்கில் ஒருவராக அதிகரித்துள்ளது. இது அனைத்து வயது பிரிவினரிடையே மிக அதிகம்.
உடற்பருமன் மற்றும் அதனுடன் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிக்கவும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நிலைமைகளைத் தடுக்கவும் சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது.
புதிதாக தயாரிக்கப்பட்ட பானங்களில் ஊட்டச்சத்து தரக் குறியீடு உட்பட, ஆரோக்கியமான தெரிவுகளைப் பிரபலப்படுத்துவது போன்றவை அவற்றில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
2027ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து, முன்கூட்டியே பொட்டலமிட்ட உப்பு, சாஸ் (Sauce) சுவையூட்டிகள், உடனடி நூடல்ஸ், சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றுக்கும் அதில் கலந்துள்ள சோடியம், நிறைவுற்ற கொழுப்பு ஆகியவற்றுக்கான குறியீட்டை அமைச்சு விரிவுபடுத்தும்.
டௌன்டவுன் ஈஸ்டில் உள்ள டி’மார்கியூவில் நடைபெற்ற இரவு விருந்தில், 2026ஆம் ஆண்டின் முற்பாதியில் யூனோஸ் பலதுறை மருந்தகத்தில் தனது முதல் தொலைசுகாதார நிலையத்தை நிறுவப்போவதாக சிங்ஹெல்த் பலதுறை மருந்தகக் குழுமம் அறிவித்தது.