சிறாரிடம் பாலியல் குற்றங்களைப் புரிந்திருக்கும் சிங்கப்பூரர் ஏமஸ் யீ மறுபடியும் அமெரிக்கத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சில நாள்களுக்கு முன்பு பிணையில் விடுவிக்கப்பட்ட 27 வயது ஏமஸ் யீயை அமெரிக்கக் குடிநுழைவு, சுங்கத்துறை அமலாக்கப் பிரிவு (ஐஸ்) மீண்டும் தடுப்புக்காவலில் வைத்துள்ளது. யீ சிங்கப்பூருக்கு நாடுகடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திங்கட்கிழமை (நவம்பர் 24) நிலவரப்படி, விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள டாட்ஜ் தடுப்புக்காவல் நிலையத்தில் யீ தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐஸ் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யீ எப்போது கைது செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை.
ஐஸ் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி, குடிநுழைவு தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒருவரை உள்நாட்டில் இருக்கச் செய்வதற்காக அல்லது அவரை அமெரிக்காவிலிருந்து வெளியேற்ற அந்நபர் தடுத்துவைக்கப்படுவார். யீயின் வழக்கு எப்போது குடிநுழைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்ற விவரமும் தெரியவில்லை.
சிங்கப்பூர் திரும்பினால் யீ குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவார்.
தேசிய சேவையில் சேர்க்கப்படுவதற்கான சட்டத்தின்கீழ் (Enlistment Act) அவர் மீது குற்றச்சாட்டு(கள்) சுமத்தப்படும் என்று தற்காப்பு அமைச்சு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது. தேசிய சேவையில் சேர்வதற்கு முன்பு மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைக்கு வராமல் தகுந்த உரிமமின்றி வெளிநாட்டில் இருந்தது அதற்குக் காரணம்.

