ஏமஸ் யீ தேசிய சேவை தொடர்பான குற்றங்களை ஒப்புக்கொள்ள முடிவு

ஏமஸ் யீ தேசிய சேவை தொடர்பான குற்றங்களை ஒப்புக்கொள்ள முடிவு

1 mins read
c80aefa2-5a9d-4920-8e11-a23b1caae335
கடந்த மார்ச் மாதம், படை ஆள்சேர்ப்புச் சட்டத்தின்கீழ் ஏமஸ் யீ மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னாள் குழந்தை நடிகரான ஏமஸ் யீ, தேசிய சேவை கடமைகளை நிறைவேற்றத் தவறியதன் தொடர்பில் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை வரும் செப்டம்பர் 7ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ள உள்ளார்.

கடந்த மார்ச் மாதம், படை ஆள்சேர்ப்புச் சட்டத்தின்கீழ் யீ, 27, மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

தேசிய சேவைக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல யீ தவறியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன. மேலும், அடைக்கலம் நாடி 2016ஆம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்காவிற்குச் சென்ற அவர், நாட்டைவிட்டு வெளியேறுவதற்குத் தேவையான செல்லுபடியாகும் அனுமதிச் சீட்டு இல்லாமல் சிங்கப்பூருக்கு வெளியே தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு டிசம்பர் 13 முதல் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 19 வரையிலும், 2016ஆம் ஆண்டு டிசம்பர் 15 முதல் 2026ஆம் ஆண்டு மார்ச் 19 வரையிலும் நாட்டைவிட்டு வெளியேறுவதற்குத் தேவையான செல்லுபடியாகும் அனுமதிச் சீட்டு இல்லாமல் யீ சிங்கப்பூரைவிட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

இக்காலகட்டத்தில், தேசிய சேவைக்கான மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல அவர் தவறியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக இழிவுபடுத்தும் கருத்துகளைத் தெரிவித்ததால் சிங்கப்பூரில் தொடர்ச்சியாகச் சட்டச் சிக்கல்களில் சிக்கிய யீ, பின்னர் அமெரிக்காவிற்குத் தப்பிச் சென்றார்.

அவருக்கு 2018ல் அமெரிக்காவில் அடைக்கலம் வழங்கப்பட்டது. இருப்பினும், குழந்தை ஆபாசப் படங்கள் தொடர்பான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 19ஆம் தேதி அவர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்
ஏமஸ் யீகுற்றச்சாட்டுஒப்புதல்