கரிமம் குறைந்த சுத்தமான மின்சாரத்தை வட்டார நாடுகளில் இருந்து வாங்கும் அளவை இரட்டிப்பாக்க சிங்கப்பூர் திட்டமிட்டு உள்ளது.
பலதரப்பு உடன்பாடு நீட்டிப்பால் அது சாத்தியமாகிறது.
அந்த உடன்பாடு நீட்டிப்பால் லாவோஸில் இருந்து தாய்லாந்து மற்றும் மலேசியா வழியாக ‘ஹைட்ரோபவர்’ எனப்படும் நீர்மின்னாற்றலை கூடுதலாகப் பெறுவதற்குக் குறுக்கே இருந்த தடை விலகியுள்ளது.
அதன்படி, மலேசியாவில் இருந்து தருவிக்கப்படும் கரிமம் குறைந்த மின்சாரத்தின் மொத்த அளவு 200 மெகாவாட் என இரட்டிப்பாகிறது.
அந்த மின்சாரம் லாவோஸ்-தாய்லாந்து வழியாக மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு விநியோகிக்கப்படும்.
மலேசியாவிலிருந்து பெறக்கூடிய மின்சாரத்தின் அளவு தற்போதைய நிலையில் 100 மெகாவாட்டாக உள்ளது.
கெப்பல் குழுமமும் எரிசக்திச் சந்தை ஆணையமும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்று உள்ளன.
சிங்கப்பூர் அதன் மின்துறையில் கரிமப் பயன்பாட்டைக் குறைக்க வேகமாக முயன்று வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
சோதனை முயற்சியாக, கடந்த 2022ஆம் ஆண்டு சிங்கப்பூர் 100 மெகாவாட் நீர்மின்சாரத்தை தருவிக்கத் தொடங்கியது.
தற்போதைய லாவோஸ்-தாய்லாந்து-மலேசியா-சிங்கப்பூர் என்னும் நான்கு நாடுகளுக்கு இடையிலான தொடர்பு வழியில் அந்த மின்சாரத்தை இறக்குமதி செய்யும் முயற்சி அது.
இருப்பினும், உடன்பாடு நீட்டிப்பில் சுணக்கம் ஏற்பட்டதாக ஜூலை மாதம் நடுப்பகுதியில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டு இருந்தது.
தாய்லாந்து மற்றும் மலேசியா வழியாக எரிசக்தியைக் கொண்டு செல்வது தொடர்பாகவும் கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் அளவு தொடர்பாகவும் எழுந்த கருத்துவேறுபாடுகளால் அந்த முயற்சியில் சிறுதடை ஏற்பட்டதாக ராய்ட்டர்ஸ் கூறியிருந்தது.
இதற்கிடையே, மின்சார இறக்குமதித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு, தான் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் இருப்பினும், திட்டத்தைச் செயல்படுத்த, சம்பந்தப்பட்ட எல்லா அரசாங்கங்களின் ஒப்புதல் தேவைப்படுவதாகவும் எரிசக்திச் சந்தை ஆணையம் செப்டம்பர் 13ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறியது.
இரண்டாம் கட்ட மின் இறக்குமதித் திட்டத்தை ஆதரிக்கும் நோக்கில், கெப்பல் குழுமத்திற்கான மின் இறக்குமதி உரிமத்தை ஆணையம் மேலும் ஈராண்டுகளுக்கு, அதாவது 2026ஆம் ஆண்டு வரை நீட்டித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து மின்சாரம் தருவிக்கப்படும் விகிதம் 2035ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் மொத்த எரிசக்தித் தேவையில் மூன்றில் ஒரு பகுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

