சிறந்த வாடகை வாகனச் செயலி குறித்து ஓர் அலசல்

சிறந்த வாடகை வாகனச் செயலி குறித்து ஓர் அலசல்

3 mins read
f3ba9547-575c-4e5b-8a76-f8af693857ae
ஜனவரி 19, 23 மற்றும் 28 ஆம் தேதிகளில் (திங்கள், புதன் மற்றும் வெள்ளி) கிராப், கோஜெக், ரைட், தடா மற்றும் ஸிக் ஆகிய ஐந்து செயலிகளில் பயணம் செய்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் குழு கண்டறிந்த முக்கிய உண்மைகள் இவை. அவர்கள் மொத்தம் 45 பயணங்களை மேற்கொண்டு கட்டணங்களையும் காத்திருப்பு நேரங்களையும் ஒப்பிட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொடுக்கும் பணத்துக்குத் தரமான, நியாயமான சேவை வழங்கும் வாடகை வாகனச் செயலியைக் கண்டறிய ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆய்வு ஒன்றை நடத்தியது.

காலை நேரப் போக்குவரத்து நெரிசலில் நீங்கள் வேலைக்கு விரைந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், காத்திருப்பு நேரம் மற்றும் கட்டணம் ஆகிய இரண்டிலும் கம்ஃபர்ட்மெல்குரோவின் ஸிக் (Zig) செயலி உங்களுக்குச் சிறந்த தேர்வாக இருக்கலாம்.

காலை மற்றும் மதிய உணவு நேரப் பயணங்களுக்கு, சராசரியாக கிராப் (Grab) செயலி அதிக விலை கொண்டதாக இருந்தது. விலையும் அதிகமாக இருந்து, அதே சமயம் முன்பதிவு செய்ததிலிருந்து வாகனம் வந்து சேரும் வேகத்தில் இது முதன்மையாக இருக்கவில்லை. சில நேரங்களில் கிராப்பைவிடக் குறைந்த விலையில் தடா (Tada) மற்றும் Zig வாகனங்கள் விரைவாக வந்து சேர்ந்தன.

இருப்பினும், மாலை நேரங்களில், ஐந்து செயலிகளில் கிராப் மிக விரைவான சேவையை வழங்கியது. மேலும் அதன் கட்டணங்கள் ஏறக்குறைய கோஜெக்கிற்கு (Gojek) இணையாகவும் மூன்றாவது மலிவான தேர்வாகவும் இருந்தது.

மாலை நேரங்களில் ரைட் (Ryde) மிகவும் விலையுயர்ந்த தளமாக இருந்தது.

தடா பொதுவாக காலை, பிற்பகல் மற்றும் மாலை ஆகிய மூன்று நேரங்களிலும் குறைவான காத்திருப்பு நேரத்தைப் பதிவு செய்தது. காலையில் இது இரண்டாவது அதிகக் கட்டணம் கொண்டதாக இருந்தபோதிலும், பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் மிகவும் மலிவான தளமாக இருந்தது.

ஜனவரி 19, 23 மற்றும் 28 ஆம் தேதிகளில் (திங்கள், புதன் மற்றும் வெள்ளி) கிராப், கோஜெக், ரைட், தடா மற்றும் ஸிக் ஆகிய ஐந்து செயலிகளில் பயணம் செய்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் குழு கண்டறிந்த முக்கிய உண்மைகள் இவை. அவர்கள் மொத்தம் 45 பயணங்களை மேற்கொண்டு கட்டணங்களையும் காத்திருப்பு நேரங்களையும் ஒப்பிட்டனர்.

இணையவழித் தளம் சார்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு விதிகளுக்காக ஜனவரி 1 முதல் சில நிறுவனங்கள் தங்கள் சேவைக்கட்டணத்தை உயர்த்திய பின்னணியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்விற்குப் பிறகு, பிப்ரவரி முதல் கோஜெக் தனது சேவைக்கட்டணத்தை 20 காசு உயர்த்தியது. முன்னதாக 90 காசு முதல் $1.50 வரை இருந்த இந்தக் கட்டணம், தற்போது பயணிகளிடம் $1.10 முதல் $1.70 வரை வசூலிக்கப்படுகிறது. இங்கு தங்களது சேவையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு இந்தக் கட்டணம் உதவும் என்று அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இணையவழித் தளத் தொழிலாளர்கள் சட்டத்தின்கீழ் ஓட்டுநர்களின் மத்திய சேமநிதிக் கணக்குகளில் அதிக பங்களிக்க வேண்டிய அவசியத்தைக் காரணம் காட்டி, கிராப் மற்றும் கம்ஃபர்ட்டெல்குரோ ஜனவரி 1 முதல் தங்கள் சேவைக்கட்டணத்தை உயர்த்தின.

Grab பயணிகள் இப்போது $1.20 சேவைக்கட்டணமாகச் செலுத்துகின்றனர் (முன்னர் 90 காசு). ஸிக் போன்ற தளங்களைப் பயன்படுத்தும் கம்ஃபர்ட்டெல்குரோ பயணிகள் $1 முதல் $1.30 வரை செலுத்துகின்றனர் (முன்னர் $1 முதல் $1.20 வரை).

ஜனவரி 1 முதல்,கோஜெக்கின் பயணத் தொடக்கக் கட்டணம் மற்றும் குறைந்தபட்சக் கட்டணம் தலா 50 காசு உயர்ந்தன. ஓட்டுநர்களின் வருவாயை மேம்படுத்த இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன.

பிப்ரவரி 17 முதல் தனது சேவைக்கட்டணத்தை ஒரு பயணத்திற்கு 11 காசு என்ற விகிதத்தில் உயர்த்தப்போவதாக ரைட் அறிவித்துள்ளது. $18 மற்றும் அதற்குக் குறைவான கட்டணங்களுக்கு வசூலிக்கப்படும் $1.14 கட்டணம் $1.25 ஆக உயரும். $18க்கு மேல் உள்ள கட்டணங்களுக்கு வசூலிக்கப்படும் $1.36 கட்டணம் $1.47 ஆக உயரும்.

கட்டணங்களை உயர்த்தும் உடனடித் திட்டம் ஏதும் இல்லை என்று தடா தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்