பலதுறைத் தொழிற்கல்லூரிப் பட்டதாரிகளுக்கான முழுநேர வேலைவாய்ப்பு விகிதம் நிலையாக உள்ளது

2 mins read
ee58479d-23a3-4173-8ac5-6c395688ece7
முழுநேர வேலையில் உள்ள பலதுறைத் தொழிற்கல்லூரிப் பட்டதாரிகளின் இடைநிலை மொத்த மாதச் சம்பளம், 2024ல் 2,900 வெள்ளியிலிருந்து 2025ல் 3,000 வெள்ளிக்கு உயர்ந்தது. - படம்: சாவ்பாவ்

பலதுறைத் தொழிற்கல்லூரிகளிலிருந்து புதிதாகப் பட்டயம் பெற்றவர்கள், முழுநேர வேலைகளில் சேரும் விகிதம் கடந்த ஆண்டு தொடர்ந்து நிலையாக உள்ளது. அவர்களுக்கான தொடக்கச் சம்பளமும் ஏறுமுகமாக உள்ளது.

வியாழக்கிழமை (ஜனவரி 15) வெளியிடப்பட்ட முழுநேர வேலைகளில் சேர்ந்த பட்டதாரிகளுக்கான கருத்தாய்வுத் தரவுகளின்படி, புதிதாகப் பட்டயம் பெற்றோரில் 54.2 விழுக்காட்டினர் 2025ல் முழுநேர, நிரந்தர வேலையில் உள்ளனர். இந்த விகிதம், 2024ல் பதிவான 54.6 விழுக்காட்டைக் காட்டிலும் சற்றுக் குறைவு.

அத்தகைய வேலைகளிலுள்ள ஊழியர்களின் இடைநிலை மொத்த மாதச் சம்பளம், 2024இல் 2,900 வெள்ளியிலிருந்து 2025இல் 3,000 வெள்ளிக்கு உயர்ந்தது.

கடந்த சில ஆண்டுகளைப் போல இம்முறையும் மானுடவியல் மற்றும் சமூக அறிவியலில் பட்டயம் பெற்றவர்கள், ஆக அதிகமாக $3,200 மாதச் சம்பளத்தை ஈட்டினர். அதற்கு அடுத்த நிலையில், சுகாதார அறிவியல் துறையைச் சேர்ந்தவர்கள் $3,011 மாதச் சம்பளம் பெற்றனர்.

ஒட்டுமொத்தமாக, 2025ல் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களில் 90 விழுக்காட்டினர்க்குப் பட்டயம் பெற்றபின் அல்லது முழுநேர தேசியச் சேவையை நிறைவேற்றியபின் ஆறு மாதங்களுக்குள் வேலை கிடைத்தது. இது, 2024ல் 90.4 விழுக்காடாக இருந்தது.

வேலைச் சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மைக்கும் கொந்தளிப்பான பொருளியல் சூழலுக்கும் இடையில் இந்த முடிவுகள் வெளிவந்துள்ளன. பலதுறைத் தொழிற்கல்லூரிப் பட்டதாரிகளுக்கு வேலை உறுதிசெய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை இந்தக் கருத்தாய்வு முதன்முதலாகக் காட்டுகிறது.

தற்போது வேலை செய்துவரும் அத்தகைய பட்டதாரிகள் (முழுநேர, பகுதிநேர அல்லது தற்காலிக முறையிலான வேலை) மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டவர்கள் குறித்த தரவுகளை இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. இதுவரை வேலை கிடைக்காதவர்களைப் பற்றிய கூடுதல் விவரங்களையும் இந்தக் கருத்தாய்வு வழங்குகிறது.

வேலையில் சேரும் வாய்ப்பை நிராகரித்தவர்கள், வேலைகளுக்கு விண்ணப்பித்தும் வாய்ப்பு பெறாதவர்கள், முழுநேர வேலையைத் தேடாதவர்கள் என மூன்று வகையினர் இதில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த ஆய்வில் மொத்தம் 12,835 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 7,758 பேர் புதிதாகப் பலதுறைத் தொழிற்கல்லூரியிலிருந்து பட்டயம் பெற்றவர்கள். 5,050 பேர் தங்கள் தேசியச் சேவையை 2024 ஏப்ரல் 1-க்கும் 2025 மார்ச் 31-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நிறைவேற்றியவர்கள்.

குறிப்புச் சொற்கள்