வாக்கு எண்ணிக்கையில் 78.95 விழுக்காடு வாக்குகளுடன் மசெகவிற்கு அபார வெற்றி.

மூத்த அமைச்சர் லீ தொகுதி: 10 ஆண்டுகளில் அதிக வாக்குகள்

2 mins read
1948532f-b2e6-41ce-a5f5-a8477d88e81a
மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கின் தலைமைத்துவத்தில் இந்த அணி களம் கண்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

மும்முனைப் போட்டி நிலவிய அங் மோ கியோ குழுத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் மக்கள் செயல் கட்சிக்கு 78.95 விழுக்காடு வாக்குகள் கிடைத்து வாகை சூடியது.

சிங்கப்பூர் ஐக்கிய கட்சிக்கு 10.84 விழுக்காடு வாக்குகளும் மக்கள் சக்தி கட்சிக்கு 10.21 விழுக்காடு வாக்குகளும் கிட்டியுள்ளன.  

மக்கள் செயல் கட்சி அணியில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்குடன் ஜாஸ்மின் லாவ், விக்டர் லாய், டேரல் டேவிட், நாடியா சம்டின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த வெற்றியின் அறிவிப்பை அடுத்து, அணித்தலைவர் திரு லீ வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

“உலகில் பல்வேறு நடப்புகள் நிகழ்ந்து வருகிறது. எங்களுக்குப் பல கவலைகள் உள்ளன,” என்று திரு லீ, இயோ சூ காங் விளையாட்டரங்களில் திரண்ட ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.

“மக்கள் செயல் கட்சியுடன் நாங்கள் உங்களுடன் பணியாற்ற முடியும். உங்கள் நம்பிக்கையுடனும் முழுமையான ஆதரவுடனும் குடும்பங்களுக்கும் நாட்டுக்கும் எதிர்காலத்திற்கும் நாங்கள் மிகச் சிறப்பாகச் செயலாற்றுவோம்,” என்றார் திரு லீ.

கெபுன் பாரு, ஜாலான் காயு, இயோ சூ காங் ஆகிய தனித்தொகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தம் அணி செயலாற்றும் என்றும் திரு லீ கூறினார்.

1991ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதியில் முதன்முறையாக மும்முனைப்போட்டி நடந்தேறியுள்ளது. 161,499 வாக்காளர்களைக் கொண்டுள்ள அங் மோ கியோ குழுத்தொகுதி, தற்போதுள்ள 18 குழுத்தொகுதிகளில் ஆகப் பெரியது.

தற்போது மூத்த அமைச்சராக உள்ள லீ சியன் லூங்கின் தலைமைத்துவத்தில் இந்த அணி களம் கண்டது.

2020 தேர்தலில் திரு லீ வழிநடத்திய மக்கள் செயல் கட்சி அணி, 71.91 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று சீர்திருத்தக் கட்சியைத் தோற்கடித்தது. இந்தத் தேர்தலில் மசெக அணியை எதிர்த்து இரு வெவ்வேறு கட்சிகளின் அணி களமிறங்கியபோதிலும் மசெக அணிக்குக் கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிக வாக்குகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2015 பொதுத் தேர்தலில் மசெக அணி 78.64% வாக்குகளுடன் வெற்றிபெற்றது.

குறிப்புச் சொற்கள்
GE2025தேர்தல்அங் மோ கியோதொழிற்சங்கம்