தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அங் மோ கியோ சாலைச் சந்திப்பு தற்காலிக சுற்றுச் சந்திப்பாக மாற்றப்படும்

2 mins read
f4fa75b4-6f9f-4839-a1c5-8c5efd28e8ff
அங் மோ கியோ அவென்யூ 5க்கும் அவென்யூ 6க்கும் இடையில் அமைக்கப்படும் சமிக்ஞை விளக்குகளுடன் கூடிய சாலைச் சுற்றுச் சந்திப்பு (ரவுண்ட்அபவ்ட்) அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை செயல்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அங் மோ கியோவில் மே ஃபிளவர் தொடக்கப் பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள சாலைச் சந்திப்பு, ‘ரவுண்ட்அபவ்ட்’ எனப்படும் வட்ட வடிவிலான சாலைச் சுற்றுச் சந்திப்பாகத் தற்காலிகமாக மாற்றப்படவிருக்கிறது. கூடுதலாக, அங்கே போக்குவரத்துச் சமிக்ஞை விளக்குகளும் செயல்படும்.

வடக்கு-தெற்குப் பாதைக்கான சுரங்கக் கட்டுமானப் பணிகளுக்காக, ஆகஸ்ட் 18ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் கிட்டத்தட்ட ஓராண்டு காலத்திற்கு இந்தத் தற்காலிக ஏற்பாடு நடப்பில் இருக்கும்.

அங் மோ கியோ அவென்யூ 5க்கும் அவென்யூ 6க்கும் இடையிலான இந்தச் சாலைச் சுற்றுச் சந்திப்பு 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை செயல்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம், ஆகஸ்ட் 12ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.

தற்போதைய சாலைச் சந்திப்பு மேரிமவுண்ட் ரோட்டை அங் மோ கியோ அவென்யூ 4, இயோ சூ காங் ரோடு, மத்திய விரைவுச்சாலை ஆகியவற்றுடன் இணைக்கிறது.

வடக்கு-தெற்கு ரயில்பாதை பரபரப்பான, அதிகக் கட்டடங்கள் நிறைந்த பகுதிகள் வழியாக அமைக்கப்படுவதால் அதன் கட்டுமானப் பணிகளைப் பாதுகாப்பாக மேற்கொள்ள, போக்குவரத்தைத் திசை திருப்ப வேண்டியது அவசியம் என்று ஆணையம் குறிப்பிட்டது.

இதனால் அந்த வட்டாரத்தில் பயண நேரம் பாதிக்கப்படக்கூடும். எனவே, வாகனமோட்டிகளும் பயணிகளும் தங்கள் பயணங்களை நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளும்படி ஆணையம் வலியுறுத்தியது. பாதிக்கப்பட்ட சாலைகளில் உள்ள சாலைக் குறிப்புகளைப் பின்பற்றும்படியும் அது கேட்டுக்கொண்டது.

பாதிக்கப்பட்ட பகுதியில் வாகனமோட்டிகளுக்காக அறிவிப்புப் பலகைகளும் அமைக்கப்படும். குறிப்பிட்ட சாலைகள் தொடர்பில் தெளிவான வழிகாட்டிக் குறிப்புகள் அவற்றில் இடம்பெற்றிருக்கும்.

சென்ற ஆண்டு (2023) ஏப்ரல் மாதம், மேரிமவுண்ட் சமூக மன்றத்துக்கு அருகிலும் இதேபோன்ற சமிக்ஞை விளக்குகளுடன் கூடிய சாலைச் சுற்றுச் சந்திப்பு அமைக்கப்பட்டது. பின்னர் அது சாலைச் சந்திப்பாக மீண்டும் செயல்படத் தொடங்கியது.

21.5 கிலோமீட்டர் நீளமான வடக்கு-தெற்குப் பாதை கட்டி முடிக்கப்பட்டவுடன் அது உட்லண்ட்ஸ், செம்பவாங், ஈசூன், அங் மோ கியோ போன்ற பகுதிகளிலிருந்து நகருக்குச் செல்லும் பயண நேரத்தில் 30 நிமிடங்கள் வரை சேமிக்க உதவும்.

குறிப்புச் சொற்கள்