குரங்குகளின் சேட்டையால் கொமோடோ டிராகனுக்கு ஏற்பட்ட வேதனை

குரங்குகளின் சேட்டையால் கொமோடோ டிராகனுக்கு ஏற்பட்ட வேதனை

2 mins read
f1d1ede9-872b-4edc-a7be-63fa3d9f5ca6
டாக்டர் ஹெங் யிரூயி தமது கையை மாரியோவின் வயிற்றுக்குள் செலுத்தி பொம்மைகளை எடுக்க வேண்டியிருந்தது. - படங்கள்: மண்டாய் வனவிலங்கு காப்பகம்/இன்ஸ்டகிராம்

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் உள்ள மாரியோ என்றழைக்கப்படும் கொமோடோ டிராகன், சில பொம்மைகளை விழுங்கியதால் அதற்கு மருத்துவ அவசரநிலை ஏற்பட்டது.

பொம்மைகளை இரை என்று தவறாக நினைத்து அவற்றை அது விழுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

திங்கட்கிழமையன்று (மார்ச் 2) இன்ஸ்டகிராமில் வெளியிடப்பட்ட காணொளியில், மண்டாய் வனவிலங்குக் குழுமம் இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்பதைப் பகிர்ந்துள்ளது. சில காட்டுக் குரங்குகள், பொம்மைகள் இருந்த மூடியிருந்த பை ஒன்றைக் கண்டெடுத்து அதனுடன் விளையாடியபோது இந்தச் சிக்கல் தொடங்கியது.

அந்தக் குறும்புக்காரக் குரங்குகள் அந்தப் பையைக் கிழித்து, உள்ளே இருந்த பொம்மைகளை கொமோடோ டிராகனின் இருப்பிடத்தைச் சுற்றியும் வீசின என்று விலங்கு மருத்துவப் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ஹெங் யிரூயி தெரிவித்தார்.

இந்த அமளி, அங்கிருந்த மாரியோ என்ற கொமோடோ டிராகனின் கவனத்தை ஈர்த்தது. மாரியோ, இந்தோனீசியாவிற்கு வெளியே ஆசியாவில் வெற்றிகரமாக அடைகாக்கப்பட்டு பிறந்த முதல் கொமோடோ டிராகன் என்பது குறிப்பிடத்தக்கது.

“கொமோடோ டிராகன்கள் பதுங்கியிருந்து வேட்டையாடும் குணம் கொண்டவை. அதன் இருப்பிடத்தில் ஏற்பட்ட அதீத நடமாட்டமும் சத்தமும் அதன் ஆர்வத்தைத் தூண்டியதால், அது இயல்பாகவே அந்தப் பொம்மைகளை நோக்கிச் சென்றுள்ளது,” என்று டாக்டர் ஹெங் கூறினார். மாரியோ அந்தப் பொம்மைகளில் சிலவற்றை அப்படியே முழுதாக விழுங்கியது.

“பொதுவாக கொமோடோ டிராகன்கள் தங்களுக்கு ஒவ்வாத பொருள்களை வாந்தி எடுத்துவிடும். ஆனால், மாரியோ அடுத்த 24 மணி நேரத்திற்கு அப்படிச் செய்யவில்லை. இதனால் அந்தப் பொம்மைகள் அதன் குடலில் அடைப்பை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்று மருத்துவக் குழுவினர் கவலை அடைந்தனர்,” என்றார் டாக்டர் ஹெங்.

மருத்துவக் குழுவினர் முதலில் மாரியோவின் வயிற்றுக்குள் கேஸ்ட்ரோஸ்கோப் கருவியைச் செலுத்தி, அறுவை சிகிச்சை இன்றி பொம்மைகளை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால், பலமுறை முயன்றும் சில நூல்கள் மட்டுமே வெளியே வந்தன.

கிட்டத்தட்ட 90 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, வேறு வழியின்றி டாக்டர் ஹெங் தமது கையை மாரியோவின் வயிற்றுக்குள் செலுத்தி பொம்மைகளை எடுக்க வேண்டியிருந்தது.

“அந்தப் பொம்மைகளை முழு பலத்துடன் பிடித்து இழுப்பது மிகவும் கடினமாக இருந்தது. என்னால் முதல் பொம்மையை மட்டுமே வெளியே இழுக்க முடிந்தது. நான் மிகவும் சோர்வடைந்துவிட்டதால், இரண்டாவது பொம்மையை எடுக்க மற்றவர்களின் உதவியை நாட வேண்டியிருந்தது,” என்று டாக்டர் ஹெங் விவரித்தார்.

இறுதியில், இரண்டு பொம்மைகள் வெற்றிகரமாக வெளியே எடுக்கப்பட்டன. இதன் மூலம் மாரியோவுக்கு அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட்டது.

அடுத்த நாள், மாரியோ வழக்கம்போல மலம் கழித்தது. இது அதன் குடலில் எந்தத் தடையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதால் மருத்துவக் குழுவினர் நிம்மதியடைந்தனர்.

குறிப்புச் சொற்கள்