விலங்குகளின் சுகாதாரம், நலன் ஆகியவை தொடர்பான பாதுகாப்பு வரையறைகளை வலுவாக்க விலங்கு மற்றும் பறவைப் பாதுகாப்புச் சட்டத்தை விலங்கு, கால்நடை மருத்துவச் சேவை (ஏவிஎஸ்) மறுஆய்வு செய்துவருகிறது.
தேசிய பூங்காக் கழகத்தில் ஒரு குழுமமாக விளங்கும் ‘ஏவிஎஸ்’, செல்லப்பிராணி துறை தொடர்பான விலங்குநலன் குறித்த அதன் கோட்பாட்டையும் மறுஆய்வு செய்து வருகிறது.
அமைப்பு அதன் முதல் மறுஆய்வை 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் செய்து ஐந்தாண்டு காலத்திற்குப்பின் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
“விலங்கு மற்றும் பறவைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தண்டனை விதிக்கப்படுவதை மறுஆய்வு கருத்தில் கொள்ளும். விலங்குவதை தொடர்பான செயல்களைத் தடுப்பதற்கு இது உதவும்,” என்றார் ஏவிஎஸ்ஸின் தலைமை இயக்குநர் சாங் சியோவ் ஃபூங்.
கடந்த சில ஆண்டுகளாக பல சம்பவங்கள் குறித்து செய்திகள் வெளிவந்துள்ளதை அடுத்து இந்த மறுஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
‘விலங்குவதை தொடர்பான ஆகக் கொடூரமான வழக்கு’ என்று அரசுத் தரப்பு குறிப்பிட்ட வழக்கு ஒன்றில் 32 வயது பேரி லின் பெங்லி மீது குற்றம் சாட்டப்பட்டது.
அந்த ஆடவர் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்த, அங் மோ கியோ வட்டாரத்தில் உள்ள பூனைகளைத் துன்புறுத்தினார்.
பூனைகளை உதைத்து, கழுத்தை நெரித்ததுடன் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடிக் கட்டடங்களின் உயர்மாடியிலிருந்து இரண்டு பூனைகளைக் கீழே எறிந்தும் இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஆடவருக்கு 24 மாதச் சிறைத் தண்டனை விதிக்குமாறு அரசுத் தரப்பு கோரியுள்ள நிலையில், நவம்பர் 13ஆம் தேதி அவருக்குத் தண்டனை விதிக்கப்படும்.
இதற்கிடையே, செல்லப்பிராணித் துறை தொடர்பான விலங்குநலன் கோட்பாடுகளை அமைப்பு மறுஆய்வு செய்கையில் முடிதிருத்துதல், செல்லப்பிராணி தங்குவதற்கான வசதிகள் தொடர்பில் பராமரிக்கத் தவறுவதும் கருத்தில் கொள்ளப்படும்.