சிங்கப்பூரில் 2025ஆம் ஆண்டு விலங்குக் கடத்தல் சம்பவங்கள் குறைந்தன.
2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டு விலங்குக் கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தது.
இதுகுறித்த தரவுகளை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) தேசியப் பூங்காக் கழகம் மற்றும் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் பார்க்க முடிந்தது.
2025ஆம் ஆண்டு 28 விலங்குக் கடத்தல் சம்பவங்கள் பதிவாகின. 2024ஆம் ஆண்டு அது 42ஆக இருந்தது. 2023ல் 35 சம்பவங்களும் 2022ல் 34 சம்பவங்களும் பதிவாகின.
காட்டு விலங்குகள், பூனை, நாய், மீன், பறவைகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகள் ஆகியவை கடந்த ஆண்டு கடத்தப்பட்டன. சில அரிய வகை விலங்குகளும் அவற்றில் இருந்தன.
28 கடத்தல் சம்பவங்களில் எட்டுச் சம்பவங்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டன. மற்ற 20 சம்பவங்களுக்கு அபராதம் உள்ளிட்ட உடனடித் தண்டனை விதிக்கப்பட்டது. கடத்தல் விலங்குகளை வாங்கியவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
கடத்தல் விலங்குகளை வாங்குவது பொதுச் சுகாதாரத்திற்குப் பெரிய அச்சுறுத்தல் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவாஸ் சோதனைச்சாவடி வழியாக மூன்று நாய்க்குட்டிகளைக் கடத்தி வந்த ஆடவருக்கு 18 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மூன்று நாய்க் குட்டிகளும் பையில் பதுக்கி மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவை மயக்க நிலையில் இருந்தன.
அந்த நாய்க்குட்டிகளுக்கும் ஆபத்தான கிருமித்தொற்று இருந்தது. அவை எளிதாகப் பரவக்கூடியவை, அதனால் உயிரிழப்புகளும் ஏற்படக்கூடும்.
கடத்தல் மூலம் சிங்கப்பூருக்குள் வரும் விலங்குகள் பல கிருமித்தொற்றுகளைக் கொண்டுவரக்கூடும். அதனால் உள்ளூர் விலங்குகள், செல்லப் பிராணிகள், மனிதர்கள் எனப் பலரும் பாதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் நினைவூட்டினர்.
சிங்கப்பூரில் வெறிநாய்க்கடித் தொற்று 1953ஆம் ஆண்டுமுதல் இல்லை. மிக ஆபத்தான அந்தக் கிருமி இதுபோன்ற கடத்தல் சம்பவங்களால் மீண்டும் நாட்டிற்குள் வரலாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

