‘கூலி’ திரைப்படப் பாடல் ஒன்றைக் கொண்டுள்ள இன்ஸ்டகிராம் குறுங்காணொளி , சிங்கப்பூர்க் காவல்துறையினரின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளிவந்து இணையத்தில் பரவலாகி வருகிறது.
கிட்டத்தட்ட 20 மணி நேரத்திற்குள் அந்தக் காணொளி, 4.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை ஈர்த்தது.
சீருடை அதிகாரிகள், போக்குவரத்துக் காவல்துறையினர், பொதுப் போக்குவரத்து பாதுகாப்புப் படைப் பிரிவு, கவச வாகனப் பிரிவு ஆகிய வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை அந்த குறுங்காணொளி காண்பிக்கிறது.
அந்தக் காணொளி, தேசிய தின அணிவகுப்புக்குரிய காவல்துறையின் கடமைகளைப் பற்றியது. வாணவேடிக்கை பின்னணியை அலங்கரிக்க, சீருடை, பாதுகாப்பு ஆடை ஆகியவற்றை அணிந்துள்ள அதிகாரி ஒருவர் இடம்பெறும் காட்சியுடன் காணொளி முற்றுபெறும்.
ஆகஸ்ட் 9 பிற்பகல் இரண்டு மணி நிலவரப்படி, இந்தக் காணொளி 390,000க்கும் மேற்பட்டோர் பார்த்து தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளதுடன், லைக்குகளையும் 4,106 மறுபதிவுகளையும் பெற்றுள்ளது. நேரடிக் குறுஞ்செய்தியாக அந்தக் காணொளி 138,000 முறைக்கு மேல் அனுப்பப்பட்டது.
பிரபல இந்திய திரை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் அமைப்பில் வெளிவந்த பவர்ஹவுஸ் பாடல், இந்தக் காணொளியில் இடம்பெறுகிறது. இந்திய ரேப் கலைஞரும் பாடலாசிரியருமான அறிவு, பாடல் வரிகளைப் புனைந்துள்ளார்.
நட்சத்திர நடிகர் ரஜினிகாந்த், கூலி திரைப்படத்தின் கதாநாயகராக இடம்பெறுகிறார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தத் திரைப்படம், ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளிவருகிறது.