ஒருவரின் முடியில் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர் போதைப் புழங்கியாகக் கருதப்படுவார் என்று உள்துறை மூத்த துணையமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அதனைச் செயல்படுத்தும் விதமாகப் போதைப்பொருள் தவறான பயன்பாட்டுக்கு எதிரான புதிய சட்டம் இவ்வாண்டுக்குள் அமலுக்கு வரும் என நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) அறிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்குப் பதிலளித்த இணைப் பேராசிரியர் ஃபைஷால், போதைப்பொருளின் நெடுநாள் புழக்கத்தைக் கண்டறிவதற்கு முடிச் சோதனைகள் உதவுவதாகக் குறிப்பிட்டார்.
உலகப் போதைப்பொருள் சூழல் தொடர்ந்து சவாலாகி வருவதாகக் குறிப்பிட்ட பேராசிரியர் ஃபைஷால், இந்த மாற்றங்கள் சிங்கப்பூரையும் பாதிக்கும் எனக் குறிப்பிட்டார். மெத்தம்ஃபெட்டமைன் சிங்கப்பூரில் அதிக அளவில் புழங்கப்படும் போதைப்பொருள் என்பதையும் அது உலகளவில் நிலவும் போக்கைப் பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார்.
சிங்கப்பூரின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு உத்தி கடுமையான சட்டங்களை ஆணிவேராகக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட பேராசிரியர் ஃபைஷால், அதே வேளையில் முன்தடுப்பு முயற்சிகளிலும் போதைப் புழங்கிகளுக்கான மறுவாழ்வுப் பணிகளிலும் அரசாங்கம் முதலீடு செய்திருப்பதாகக் கூறினார்.
“இந்த அணுகுமுறை பலனளித்துள்ளது. போதை நிலவரத்தைக் கட்டுக்குள் வைத்துள்ளது. 2025இல் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி), 25 போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை முறியடித்து, 21 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள பொருள்களைப் பறிமுதல் செய்தது,” என்று மூத்த அமைச்சர் ஃபைஷால் கூறினார்.
“சிஎன்பி, போதைப்பொருளுக்கு எதிராகச் செயல்படும் வெளிநாட்டு அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கி அவற்றுடன் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்கிறது. 2025இல் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு 18 இணைச் செயல்பாடுகளை நமது அனைத்துலகப் பங்காளிகளுடன் இணைந்து நடத்தியது,” என்று அவர் கூறினார்.

