மக்கள் செயல் கட்சியின் பின்னிருக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் 12 பேர் அரசாங்க நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தலைமையேற்கும் குழுக்கள் அரசாங்கக் கொள்கைகளை ஆராயும்.
மக்கள் செயல் கட்சி நேற்று, அதன் வலைத்தளத்தில் 15வது நாடாளுமன்றத் தவணைக் காலத்திற்கான அதன் அரசாங்க நாடாளுமன்றக் குழுக்களை (ஜிபிசி) அறிவித்தது.
முந்தைய பதவிக்காலத்தில் இருந்த ஜிபிசி தலைவர்கள் யாரும் தங்கள் பதவிகளில் தொடரவில்லை. 2020ஆம் ஆண்டில், மூன்று பேர் அவ்வாறு தங்கள் பதவியில் தொடர்ந்தனர்.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் ஜிபிசி தலைவராக திரு அலெக்ஸ் யாமும், தற்காப்பு மற்றும் வெளியுறவு அமைச்சுகளின் ஜிபிசி தலைவராக திரு யிப் ஹோன் வெங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திரு ஷாரில் தாஹா, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் ஜிபிசி தலைவராகவும், திரு டேரல் டேவிட் கல்வி அமைச்சின் ஜிபிசி தலைவராகவும் செயல்படுவார்கள்.
நிதி மற்றும் வர்த்தக தொழில் அமைச்சுகளின் ஜிபிசி தலைவராக திரு சக்தியாண்டி சுப்பாட்டும், சுகாதார அமைச்சின் ஜிபிசி தலைவராக திருவாட்டி மரியாம் ஜாஃபரும், மனிதவள அமைச்சின் ஜிபிசி தலைவராக திருவாட்டி இயோ வான் லிங்கும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
திரு விக்ரம் நாயர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சுகளின் ஜிபிசி தலைவராகவும் திரு ஹென்றி குவேக் தேசிய வளர்ச்சி அமைச்சின் ஜிபிசி தலைவராகவும், திரு சியே யாவ் சுவான் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் ஜிபிசி தலைவராகவும் செயல்படுவர்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் ஜிபிசி குழுவின் துணைத் தலைவராக இருந்த திருவாட்டி போ லி சான், இம்முறை அக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவாட்டி டின் பெய் லிங், போக்குவரத்து அமைச்சின் ஜிபிசி தலைவராக இருப்பார்.
மே 3 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அரசியல் பதவிகளுக்கு நியமிக்கப்படாத 19 புதிய எம்.பி.க்கள் அரசாங்க நாடாளுமன்றக் குழுக்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மே 3ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களை உள்ளடக்கிய நாடாளுமன்றத்தின் 15வது தவணைக்காலம் செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்குகிறது.