பாட்டாளிக் கட்சியின் புதிய மத்திய செயற்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய செயற்குழுவில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அண்மையில் நடைபெற்ற கட்சித் தேர்தலில் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளராகப் பிரித்தம் சிங் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், அக்கட்சியின் மத்திய செயற்குழுவில் அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாட்லி ஃபௌசியும் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரே லோவும் சேர்க்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 7) பாட்டாளிக் கட்சியின் மத்திய செயற்குழு கூடியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஜூன் மாதம் 28ஆம் தேதியன்று பாட்டாளிக் கட்சியின் கட்சித் தேர்தலும் கட்சி உறுப்பினர்களுக்கான சிறப்புக் கூட்டமும் நடைபெற்றன. அப்போது திரு பிரித்தம் சிங்கிற்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்களிப்பு நடைபெற்றது. முன்னாள் செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் தொடர்பான விவகாரத்தைத் திரு சிங் கையாண்ட விதத்துக்காக இந்த நம்பிக்கையில்லா வாக்களிப்பு நடத்தப்பட்டது.
இருப்பினும், 106 வாக்குகளில் 82 வாக்குகளைப் பெற்று கட்சித் தலைவர் பதவியைத் திரு சிங் தக்கவைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாட்டாளிக் கட்சியில் மற்றொரு கட்சித் தலைவரான சில்வியா லிம்மும் அப்பதவியைத் தொடர்ந்து வகிக்கிறார். அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருவாட்டி லிம், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியை வகித்து வருகிறார். அவர் போட்டியின்றி மீண்டும் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாட்டாளிக் கட்சியினர் வாக்களித்து மத்திய செயற்குழுவுக்கான 12 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தனர். இவர்களில் பலர் ஏற்கெனவே மத்திய செயற்குழு உறுப்பினர்களாக இருந்தவர்கள். புதிதாக மூத்த வழக்கறிஞரான திரு ஹர்பிரீத் சிங் அதில் சேர்க்கப்பட்டுள்ளார். திரு ஹர்பிரீத் சிங், 2025ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொங்கோல் குழுத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார்.
திரு ஃபாட்லியும் திரு லோவும் ஜூன் 28ஆம் தேதியன்று நடைபெற்ற வாக்களிப்பு மூலம் மத்திய செயற்குழுவில் சேர்க்கப்படவில்லை. அவர்களை மத்திய செயற்குழு உறுப்பினர்கள் சக உறுப்பினர்களாக நியமித்துள்ளனர். இவர்களையும் சேர்த்து பாட்டாளிக் கட்சியின் மத்திய செயற்குழுவில் மொத்தம் 16 பேர் இடம்பெறுகின்றனர்.

