சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்புச் செலவினம் விரைவில் ஆக அதிகச் செலவு என்ற நிலையை எட்டக்கூடும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.
அதேவேளையில் சிங்கப்பூரர்களின் அடிப்படைச் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகள் கட்டுப்படியாகக்கூடிய விலையில் தொடர்ந்து விளங்கும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
இந்த ஆண்டு (2025) அரசாங்கம் சுகாதாரத் துறைக்கு $20.9 பில்லியனை ஒதுக்கியுள்ளது. தற்காப்புச் செலவினத்துக்கு அடுத்தபடியாக ஆக அதிகமாக ஒதுக்கப்பட்ட நிதி இது. இந்த ஆண்டு தற்காப்பு அமைச்சுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மதிப்பு $23.4 பில்லியனாகும்.
தாம் அரசியலில் இணைந்த 2015ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் சுகாதாரப் பராமரிப்புச் செலவு $9 பில்லியனாக இருந்ததை அமைச்சர் ஓங் சுட்டினார்.
சென்ற ஆண்டு அது $18 பில்லியனாக அதிகரித்ததைக் குறிப்பிட்ட அவர், 2030ஆம் ஆண்டுக்குள் அது கிட்டத்தட்ட $30 பில்லியனாகும் என்று முன்னுரைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்.
புதிய மருத்துவமனைகள், தாதிமை இல்லங்கள், சமூகப் பராமரிப்பு நிலையங்கள் போன்றவற்றைக் கட்டுவதற்கும் அதன் தொடர்பில் ஊழியர்களின் சம்பளத்துக்கும் என அதிகம் செலவிட வேண்டியிருக்கும் என்றார் அமைச்சர்.
இருப்பினும், நோயாளிகள் மருத்துவக் கட்டணங்களைச் சமாளிக்க உதவும் வகையில் மானியங்களுக்காகக் குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கப்படும் என்றார் அவர்.
மக்கள்தொகை மூப்படைவதால் சந்தேகத்துக்கிடமின்றிச் சுகாதாரப் பராமரிப்புச் செலவினம் அதிகரிக்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் அமைச்சர் ஓங் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மூத்தோரின் உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்படுவது மட்டுமன்றி, அவர்கள் கூடுதலாக நோய்வாய்ப்படுவதையும், அவர்களில் பலருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதால் கூடுதல் காலம் மருத்துவமனையில் தங்க நேரிடுவதையும் அவர் சுட்டினார்.
சுகாதாரப் பராமரிப்புச் செலவினம் அதிகரிப்பதை ஈடுகட்டுவதற்காக, அரசாங்கம் வரிகளை உயர்த்தும் நிலை ஏற்படாது என்று திரு ஓங் கூறினார்.

