போலி ஆவணங்கள் தயாரித்த வழக்கறிஞரின் உரிமம் ரத்து

போலி ஆவணங்கள் தயாரித்த வழக்கறிஞரின் உரிமம் ரத்து

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2026 - 9:41 pm

2 mins read

நீதிமன்ற உத்தரவுகள், வீட்டு உடைமைப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களைப் போலியாகத் தயாரித்த குற்றத்துக்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வழக்கறிஞர் ஒருவரின் பெயர் வியாழக்கிழமையன்று (நவம்பர் 19) வழக்கறிஞர் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டது.

பானுப்பிரியா ரவிச்சந்திரன் இரண்டு நீதிமன்ற உத்தரவுகளையும் வீட்டின் உடைமைப் பத்திரம் ஒன்றையும் போலியாகத் தயாரித்திருந்தார்.

தவறிழைக்கும் வழக்கறிஞர்களைத் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யவும் அவர்களது வழக்கறிஞர் உரிமத்தை ரத்து செய்யவும் அதிகாரம் கொண்ட, சட்டத் துறையின் மிக உயர்ந்த ஒழுங்குமுறை அமைப்பான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

பானுப்பிரியாவின் பெயரைப் பதிவேட்டிலிருந்து நீக்க வேண்டும் எனச் சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கம் கோரியிருந்தது. நேர்மையற்ற செயல்கள், மோசடி தொடர்பான வழக்குகளில், வழக்கறிஞர் பதிவேட்டிலிருந்து பெயரை நீக்குவதே வழக்கமான தண்டனையாகும் எனச் சங்கத்தின் வழக்கறிஞர் மெரில் கோ வாதிட்டார்.

ஏற்கெனவே தமது சிறைத்தண்டனையை அனுபவித்து முடித்துவிட்ட பானுப்பிரியா, தமது பெயர் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டார்.

”தாம் செய்த செயலை அவரால் மாற்ற முடியாது. தமது நடத்தையால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் இந்த நீதிமன்றத்திடமும் அவர் தமது மனமார்ந்த மன்னிப்பைப் பதிவு செய்கிறார்,” என்று பானுப்பிரியாவின் வழக்கறிஞர் கோபால் பெருமாள் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பெயரைப் பதிவேட்டிலிருந்து நீக்குவதற்கான வரம்பு மீறப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், பானுப்பிரியாவின் மன்னிப்பையும் வருத்தத்தையும் கவனத்தில் கொண்டது. உரிமம் ரத்து செய்யப்பட்ட ஒரு வழக்கறிஞர், மீண்டும் வழக்கறிஞராகப் பணியாற்றத் தகுதியுடையவர் என்று நீதிமன்றம் கருதினால், மீண்டும் தம்மைப் பணியில் சேர்த்துக்கொள்ளுமாறு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க முடியும்.

குறிப்புச் சொற்கள்