மின்சிகரெட்டுகளை விற்பனை செய்தவர் என்று நம்பப்படும் ஆடவர் மீது வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) மேலும் ஒரு குற்றச்சாட்டு பதிவாகியது.
37 வயது பைரன் சுவா லொங்மிங் மீது மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கலந்த 194 மின்சிகரெட்டுகளை அவர் வைத்திருந்தது வெளிச்சத்துக்கு வந்ததும் அவர் மீது கூடுதலாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகளை அவர் விற்பனைக்காக வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று பூகிஸ் பிளஸ் கடைத்தொகுதியில் தமது காரில் அந்த மின்சிகரெட்டுகளை வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு செப்டம்பர் 18ஆம் தேதியன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.
மின்சிகரெட்டுகளையும் அவை தொடர்பான சாதனங்களையும் வைத்திருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை மற்றும் $10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகளை வைத்திருந்த, விற்பனை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.