சவூதி அரேபியாவில் உள்ள சிங்கப்பூரர்களை அழைத்து வருவதற்கான சிங்கப்பூர் ஆகாயப் படையின் இரண்டாவது விமானம் வியாழக்கிழமை (மார்ச் 12) அங்கிருந்து புறப்பட உள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ப்பதற்றம் காரணமாக, அந்த வட்டாரத்தில் உள்ள சிங்கப்பூரர்களைப் பத்திரமாக மீட்டு அழைத்து வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சவூதி அரேபியாவில் உள்ள சிங்கப்பூரர்களுடன் அந்தச் சிறப்பு விமானம் ஜெட்டா நகரிலிருந்து வியாழக்கிழமை புறப்படத் திட்டமிடப்பட்டு உள்ளது.
அன்றைய தினம் பிற்பகலில் அந்த விமானம் அங்கிருந்து புறப்படும் என்ற விவரத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டுள்ளது. இதற்கிடையே, நாடுதிரும்ப விரும்பும் சிங்கப்பூரர்களின் விவரங்களை வெளியுறவு அமைச்சு திரட்டி வருகிறது.
அந்த விமானத்தில் உள்ள இருக்கைகள், சிங்கப்பூரர்கள் விமான நிலையத்துக்கு வந்த பின்னர் ஒதுக்கப்படும். கூடுமானவரை குடும்பத்தினர் ஒன்றாக அமரும் வகையில் இருக்கைகள் ஒதுக்கப்படும்.
செவ்வாய்க்கிழமை ரியாத்திலிருந்தும் ஒரு விமானம் அங்குள்ள சிங்கப்பூரர்களுடன் சிங்கப்பூர் புறப்பட உள்ளது. தாயகம் அழைத்து வரும் விமானங்களில் கட்டணம் வசூலிக்கப்படாது என்பதால் வரையறுக்கப்பட்ட வசதிகளையே பயணிகள் எதிர்பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
குறிப்பாக, உணவு, பானம் போனறவற்றையும் சூடான நீரையும் அத்தியாவசியத் தேவைக்குப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், போர்வை, தலையணை போன்றவையும் அந்தச் சிறப்பு மீட்பு விமானத்தில் இருக்காது என்கிற தகவல்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டது.
தொடர்புடைய செய்திகள்
அந்த விமானம் முழுக்க முழுக்க சிங்கப்பூரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் பயணத்துக்குரியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

