சிங்கப்பூரில் கிளையைத் திறக்க ஆந்த்ரோப்பிக் திட்டம்

சிங்கப்பூரில் கிளையைத் திறக்க ஆந்த்ரோப்பிக் திட்டம்

2 mins read
b9991fa7-c17a-47ce-be5d-e1b7af7e50fb
கிளவுட் செயற்கை நுண்ணறிவுத் தளத்தை உருவாக்கிய ஆந்த்ரோப்பிக். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

கிளோட் செயற்கை நுண்ணறிவுத் தளத்தை உருவாக்கிய ஆந்த்ரோப்பிக் நிறுவனம் சிங்கப்பூரில் கிளையைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.

வியாழக்கிழமை (ஜூன் 4) அந்நிறுவனத்தின் இணையத்தளத்தில் நான்கு வேலை வாய்ப்புகள் இடம்பெற்றன.

நிதி, பொருட்செயல் ஆதரவு (product support), பொருளியல் ஆய்வு போன்ற துறைகளில் அந்த வேலை வாய்ப்புகள் இடம்பெற்றுள்ளன.

அதிகம் காணப்படும் போக்கு

ஏற்கெனவே ‘ஓப்பன்ஏஐ’, ‘கூகல் டீப்மைண்ட் ‘போன்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் சிங்கப்பூருக்குத் தங்களின் செயல்பாடுகளை விரிவுப்படுத்திக்கொண்டன.

அதனைத் தொடர்ந்து இப்போது ஆந்த்ரோப்பிக் இங்கு கிளையைத் திறக்க எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர்ச் சந்தையில் செயற்கை நுண்ணறிவு பின்பற்றப்பட வகைசெய்வதும் முன்களச் செயற்கை நுண்ணறிவுத் தளங்களை உருவாக்குவதும் அதன் இலக்குகளாகும்.

வேலை வாய்ப்புகள்

ஆந்த்ரோப்பிக் இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புகளில் ஒன்று இவ்வட்டாரத்துக்கான அந்நிறுவனத்தின் வர்த்தகக் கணக்கியல் பிரிவுக்கான தலைமைப் பொறுப்பாகும்.

அப்பொறுப்புக்கு நியமிக்கப்படுபவர் ஆந்த்ரோப்பிக் அனைத்துலகக் கணக்கியல் பிரிவின் தலைவரின்கீழ் பணிபுரிவார்.

ஆந்த்ரோப்பிக்கின் அனைத்துலகக் கணக்கியல் பிரிவு அயர்லாந்துக் குடியரசுத் தலைநகர் டப்ளினில் அமைந்துள்ளது.

மற்றொரு வேலை வாய்ப்பு, வட்டார அளவில் ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருளியல் வல்லுநருக்கானதாகும். அந்தப் பொறுப்பை வகிப்பவர் அரசாங்கங்கள், கல்விமான்கள், தொழில்துறைப் பங்காளிகள் போன்றோருடன் இணைந்து பணியாற்றுவார்.

இந்தப் பொறுப்பை வகிக்கவிருப்பவர் பொருளியல் கல்வியில் முனைவர் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

இந்த வேலை வாய்ப்புக்கான வருடாந்தர சம்பளம் 307,200லிருந்து 331,200 வெள்ளிக்கு இடைப்பட்டிருக்கும். விற்பனையின் மூலம் வரக்கூடிய கூடுதல் தொகையும் (commission) அதில் அடங்கும் என்று ஆந்த்ரோப்பிக்கின் வேலை வாய்ப்புகளை விளம்பரப்படுத்தும் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர மூன்று வேலை வாய்ப்புகளுக்கான சம்பள விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. சிங்கப்பூர் கிளைக்கான வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் ஊழியர்கள் அனைவரும் குறைந்தபட்சம் 25 விழுக்காட்டு நேரம் நிறுவனத்தின் அலுவலகங்களில் பணியாற்றவேண்டும் என்றும் விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய சிங்கப்பூர் கிளை, ஊழியர்களைப் பணியமர்த்துவதன் தொடர்பிலான திட்டங்களைப் பற்றி ஆந்த்ரோப்பிக் தொடர்புகொள்ளப்பட்டபோது தகவல் தர மறுத்தது.

வர்த்தகப் பதிவுத் தளமான பிஸ்ஃபைலில் குறிப்பிட்டுள்ளபடி ஆந்த்ரோப்பிக் பிபிசி ஆசிய பசிபிக் எனும் நிறுவனம் கடந்த மே மாதம் 20ஆம் தேதி பதிவுசெய்யப்பட்டிருந்தது. அதன் முகவரி 133 டெவன்‌ஷியர் ரோட்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வர்த்தகம்செயற்கை நுண்ணறிவுஏஐவேலைசம்பளம்