கோலாலம்பூர்: மலேசியாவின் தொடர்பு அமைச்சு, பகடிவதைக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு இயக்கம், தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகம், மின்னிலக்கத் தளங்கள் போன்றவற்றில் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
பகடிவதைக்கு எதிரான செய்தி மாணவர்கள், பெற்றோர் எனச் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் வகையில் கொண்டுசெல்ல அமைச்சுகளுக்கு இடையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளைத் தொடர்பு அமைச்சு மேற்கொள்ளும் என்றார் அவர்.
பகடிவதைக்கு எதிரான விரிவான இயக்கத்தைத் தொடக்கப்பள்ளிகளிலிருந்து அமல்படுத்த வேண்டும் என்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) மாமன்னர் உத்தரவிட்டார்.
“பள்ளிக்கூடங்களில் பகடிவதை செய்யும் போக்கை முடக்க மாமன்னர் விடுத்த உத்தரவை ஏற்று நடக்கிறோம். பகடிவதை மனரீதியான உணர்ச்சி ரீதியான பாதிப்புகளை மட்டும் ஏற்படுத்துவதில்லை, மரியாதையும் இரக்கமும் இல்லாத தலைமுறையை உருவாக்கக்கூடியது என்பதை மாமன்னர் தெளிவாக நினைவுபடுத்தினார்,” என்று திரு ஃபாஹ்மி சொன்னார்.
பிள்ளைகளும் பதின் வயதினரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பகடிவதைக்கு எதிரான செய்தியை மலேசியா எடுத்துக்கூற உள்ளது.
“பெற்றோர், பள்ளிகள், சமூகங்கள், ஊடகம் ஆகியவை பகடிவதையை ஒழிக்க கைகோக்கும்படி அழைக்கிறேன். ஒட்டுமொத்த முயற்சியின் மூலம்தான் மரியாதையான, கட்டுப்பாடுள்ள, இரக்கமுள்ள தலைமுறையை உருவாக்க முடியும், “என்று திரு ஃபாஹ்மி வலியுறுத்தினார்.
இதற்கிடையே, பகடிவதைக்கு ஆளாகி உயிரிழந்த ஸாரா காய்ரினா மகாதீர் என்ற மாணவியின் வழக்குத் தொடர்பில் ஐந்து பதின்ம வயதினர்மீது கோத்தா கினபாலு சிறார் நீதிமன்றத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 20) வழக்குத் தொடுக்கப்படும் என்று தலைமைச் சட்ட அதிகாரி முகமது டுசுகி மொக்தார் தெரிவித்துள்ளார்
“குற்றஞ்சாட்டப்படுவோர் அனைவரும் 18 வயதுக்குக் கீழுள்ளவர்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
காவல்துறை அதிகாரிகள் வழங்கிய விசாரணையை மறுஆய்வு செய்ததை அடுத்து அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அலுவலகம் சொன்னது.
சந்தேக நபர்கள்மீது குற்றஞ்சுமத்துவது ஸாரா காய்ரினாவின் மரணம் தொடர்பான விசாரணையைப் பாதிக்காது என்ற தலைமைச் சட்ட அலுவலகம், மரண விசாரணை நீதிமன்றத்தில் தொடரும் என்றது.
ஏறக்குறைய 195 சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பெற்றதை அடுத்து காவல்துறை அதன் விசாரணை ஆவணங்களைத் தலைமைச் சட்ட அலுவலகத்திடம் ஒப்படைத்தது.
ஸாரா காய்ரினாவின் மரண விசாரணை செப்டம்பர் 3ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.