ஊழல் எதிர்ப்பே வளர்ச்சிக்கு வழி: தொழில்துறைகளுக்கு அமைச்சர் அழைப்பு

ஊழல் எதிர்ப்பே வளர்ச்சிக்கு வழி: தொழில்துறைகளுக்கு அமைச்சர் அழைப்பு

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Sep 2026 - 3:43 pm

2 mins read

நிச்சயமற்ற உலகில் சிங்கப்பூரின் நம்பகத்தன்மையே அதன் மிகப்பெரிய பலம் என்றும் ஊழலுக்குத் துளியும் இடமில்லை என்ற கொள்கையே சிங்கப்பூரின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்துகிறது என்றும் பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) காலை நடைபெற்ற ஊழல் எதிர்ப்புப் பங்காளித்துவக் கட்டமைப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திரு டான், சிங்கப்பூரின் ஊழலற்ற, நேர்மையான கட்டமைப்பு நாட்டின் முக்கிய உத்திபூர்வ நன்மையாகும் என்றும் தெரிவித்தார்.

லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு ஒருங்கிணைத்த இவ்வாண்டுக்கான நிகழ்ச்சியில், ‘நம்பிக்கை, வணிக வளர்ச்சிக்காக ஊழல் எதிர்ப்பை முன்னெடுப்பது’ எனும் தலைப்பில் உரையாற்றிய திரு டான், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் வணிகச் செயல்பாடுகளை மெதுவாக்கி, செலவினங்களை அதிகரிக்கும் என்று நிலவும் தவறான எண்ணத்தைச் சுட்டிக்காட்டினார்.

நல்ல ஆளுமை கொண்ட நிறுவனங்களே அபாயங்களைச் சரியாகக் கையாண்டு நம்பிக்கையான பங்காளிகளை ஈர்க்க முடியும் என்ற அவர், ஊழல் தொடர்பான வழக்குகளில் தனியார் துறை சார்ந்த தொழில்களே அதிகம் பாதிக்கப்படுவதால், நிறுவனங்கள் தற்காப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே பலப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.   

லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் அண்மைய புள்ளிவிவரங்கள், 2025ல் விசாரிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட 90 பேரில் 84 பேர் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் என்று காட்டின. கடந்த 10 ஆண்டுகளில் கட்டுமானம், உற்பத்தி, போக்குவரத்துத் துறைகள் ஊழலுக்கு அதிகம் இலக்காகியுள்ளன.

‘டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ எனும் ஊழல் எதிர்ப்புக் கண்காணிப்பு அமைப்பின் ஊழல் கண்ணோட்டக் குறியீடு 2025ல், 180 நாடுகளில் சிங்கப்பூர் 3வது இடத்திலும், ஆசிய பசிபிக்கில் முதல் இடத்திலும் உள்ளது. ஆனால், அந்த நிலை நிரந்தரமல்ல என்றும் திரு டான் எச்சரித்தார்.

ஊழலுக்கு எதிரான போரில் அரசாங்கம் மட்டுமே தனியாக இயங்க முடியாது என்றார் திரு டான். வர்த்தகச் சங்கங்கள், தொழில்முறை அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை இணைந்துச் செயல்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், குறிப்பாக, சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் ஊழல் எதிர்ப்புக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்த லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் நடைமுறைக்கு ஏற்ப ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாகவும் கூறினார்.   

இந்நிலையில், நிகழ்ச்சியில், ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வை மேம்படுத்த உறுதுணையாக இருந்த நீண்டகாலப் பங்காளியான சிங்கப்பூர்ப் பட்டயக் கணக்காளர்கள் கழகத்திற்கு மதிப்புமிக்க ‘ஸ்டார் பார்டன்ர்’ விருது வழங்கப்பட்டது. அத்துடன், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்திற்கும் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. 

அவற்றைத்தவிர, பணியின்போது கையூட்டை நேர்மையுடன் நிராகரித்த காவல்துறை அதிகாரி, அமலாக்க அதிகாரி உள்ளிட்ட 19 பேருக்கு அவர்களின் துணிவுமிக்க செயல்களைப் பாராட்டிச் சிறப்பு அங்கீகாரமும் அளிக்கப்பட்டது.   

வணிகத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் தங்களின் தற்போதைய கொள்கைகள், கட்டுப்பாடுகளை நேர்மையாக மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திரு டான், கூட்டு முயற்சியின் மூலம் மட்டுமே வலுவான ஊழல் அற்ற வணிகச் சூழலை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஊழல்தொழில்துறை