பொஃப்மா உத்தரவை மீறியதாக மரண தண்டனை எதிர்ப்பு ஆர்வலர்மீது குற்றச்சாட்டு

பொஃப்மா உத்தரவை மீறியதாக மரண தண்டனை எதிர்ப்பு ஆர்வலர்மீது குற்றச்சாட்டு

1 mins read
ad034aed-d1bd-4bb0-85e9-e65a5f778b93
மரண தண்டனைக்கு எதிராகக் குரல்கொடுத்துவரும் கோகிலா அண்ணாமலைமீது ஏப்ரல் 23ஆம் தேதி குற்றம் சுமத்தப்படவுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக விதிக்கப்படும் மரண தண்டனைக்கு எதிராகப் பிரசாரம் செய்து வருபவர் சமூக ஆர்வலர் கோகிலா அண்ணாமலை.

பொஃப்மா உத்தரவுக்கு இணங்கத் தவறிய குற்றத்திற்காக வியாழக்கிழமை (ஏப்ரல் 23) அவர்மீது குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.

பொஃப்மா என்பது இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித்திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டமாகும்.

இதுதொடர்பாக பொஃப்மா அலுவலகம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) வெளியிட்ட அறிக்கையில், 2024 அக்டோபர் 2, 3 ஆகிய தேதிகளில் ஃபேஸ்புக், எக்ஸ் சமூக ஊடகத்தில் 37 வயதுப் பெண் ஒருவர் பதிவிட்ட கருத்துகளைக் குறிப்பிட்டது.

இருப்பினும், அப்பெண்ணின் பெயர் கோகிலா என்பதை அது வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

அரசாங்கம் முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் சுயமாக மரண தண்டனைகளை நிறைவேற்றுகிறது என்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரங்களை நிரூபிக்கும் பொறுப்பை அரசுத் தரப்பு ஏற்பதில்லை என்றும் அந்தப் பதிவுகளில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அதனையடுத்து, அந்தப் பதிவுகள் குறித்து திருத்த அறிவிப்புகளை வெளியிடுமாறு 2024ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி அப்பெண்ணுக்கு உத்தரவிடப்பட்டது.

அந்த உத்தரவுக்கு அவர் இணங்கவில்லை எனத் தனது அறிக்கையில் பொஃப்மா அலுவலகம் தெரிவித்தது.

மேலும், தகுந்த காரணமின்றி உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக, அவர்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவுள்ளது.

குறிப்புச் சொற்கள்