சிங்கப்பூரிலிருந்து தாம் நாடுகடத்தப்படுவதை எதிர்த்து இந்தோனீசியத் தொழிலதிபர் பௌலோஸ் டன்னோஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மின்னிலக்க அடையாள அட்டைத் திட்ட ஊழலில் 72 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசியான டன்னோசுக்குத் தொடர்பிருப்பதாக இந்தோனீசிய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனால் அந்நாட்டு அரசுக்கு ஏறக்குறைய 2.3 டிரில்லியன் ரூப்பியா (S$187 மில்லியன்) இழப்பு ஏற்பட்டது.
இந்தோனீசிய அரசின் கோரிக்கையை அடுத்து, லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு 2025 ஜனவரியில் அவரைக் கைது செய்தது. தாம் கைது செய்யப்பட்டதற்கான பிடியாணை முறையாகச் சான்றளிக்கப்படவில்லை என்றும் அதன் மொழிபெயர்ப்புகள் சட்டபூர்வமாகச் செல்லாது என்றும் டன்னோஸ் வாதிட்டார். மேலும், தமது உடல்நலக் குறைவைச் சுட்டிக்காட்டி தம்மைப் பிணையில் விடுவிக்குமாறு அவர் அனுமதி கோரினார். எனினும், இந்த வாதங்களை நீதிபதி எய்டன் சூ நிராகரித்தார். டன்னோஸ் நீதிமன்ற நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்றவில்லை என்று அவர் கூறினார். மேலும், சிறைத்துறை அவரது மருத்துவத் தேவைகளைக் கவனித்துக்கொள்ள முடியும் என்றும் அவரைப் பிணையில் விடுவித்தால் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். தமது நாடுகடத்தல் விசாரணை தொடர அனுமதி அளித்து சிங்கப்பூர் சட்ட அமைச்சர் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி டன்னோஸ் தாக்கல் செய்த மனுவையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அவரை நாடுகடத்தலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் நீதிமன்ற விசாரணைக்காக தற்போது அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


