சட்ட அமலாக்க அமைப்புகள், சந்தேகத்திற்குரிய குற்றவியல் செயல்களுடன் தொடர்புடைய கைப்பற்றப்பட்ட சொத்தை விற்க விரும்பினால், அவை தற்போது சந்தேக நபர் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்ட பணமோசடிக்கு எதிரான மற்றும் இதர விவகாரங்கள் தொடர்பான மசோதாவின் கீழ், சம்பந்தப்பட்ட தரப்பினரின் அனுமதியின்றி பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை விற்க சிங்கப்பூர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இருக்கும்.
ஆகஸ்ட் 6ஆம் தேதி, மசோதாவின் இரண்டாம் வாசிப்பின்போது, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, “ சம்பந்தப்பட்ட தரப்புகளிடமிருந்து ஒருமித்த கருத்து எட்டப்படாவிட்டால், கைப்பற்றப்பட்ட சொத்துகளை அதிகாரிகள் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்பதால் தற்போதைய சட்டம் நடைமுறைக்கு மிகவும் மாறானதாகக் கருதப்படுகிறது,” என்று தெரிவித்தார்.
“இந்தச் சொத்துகளில் வாகனங்கள், மதுபானங்கள், ஆடம்பரக் கடிகாரங்கள், கால்நடைகள் ஆகியவை அடங்கும். அவற்றைப் பராமரிப்பதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
“அவற்றின் மதிப்பும் காலப்போக்கில் குறையும்,” என்று உள்துறை இரண்டாம் அமைச்சருமான திருவாட்டி டியோ விவரித்தார்.
$3 பில்லியன் பணமோசடி வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட அல்லது முடக்கப்பட்ட சொத்துகளைப் பராமரிக்க காவல்துறையினர் கிட்டத்தட்ட $650,000 செலவிட்டுள்ளனர் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கடந்த மே மாதம் சுட்டினார்.
புதிய சட்டத் திருத்தத்தின்படி, கைப்பற்றப்பட்ட சொத்துகளைப் பராமரிப்பதற்கான செலவை சட்ட அமலாக்க அமைப்புகள் குறைத்து, அவற்றின் மதிப்பைப் பாதுகாக்க முடியும் என்று திருமதி டியோ சொன்னார்.
சந்தேக நபர் தலைமறைவாகும் சந்தர்ப்பங்களில், சந்தேகநபரின் விசாரணை நிலுவையில் இருந்தால், கைப்பற்றப்பட்ட சொத்துகளை நீதிமன்றம் அப்புறப்படுத்தக் கூடாது என்று மசோதா குறிப்பிடுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தற்போது, தொடர்ந்து பறிமுதல் செய்வதற்கான காரணங்களை சட்ட அமலாக்க அமைப்புகள் பூர்த்தி செய்யத் தவறினால், சொத்தை விடுவிக்க அல்லது அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிடலாம்.
தலைமறைவான ஒருவர் சிங்கப்பூருக்குத் திரும்ப மறுத்தால், அவரைக் காவல்துறையினர் விசாரிக்க முடியாது. இது விசாரணையைத் தடுத்து நிறுத்தலாம்.
மேலும் சொத்தைத் தொடர்ந்து கைப்பற்றுவதை நியாயப்படுத்துவது கடினம் என்று அமைச்சர் கூறினார்.
“சிங்கப்பூருக்கு வெளியே தங்கி, விசாரணையைத் தடுப்பதன் மூலம், கைப்பற்றப்பட்ட சொத்துகள் இறுதியில் அவர்களுக்கே மீண்டும் விடுவிக்கப்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள்,” என்று திருமதி டியோ மேலும் கூறினார்.
இந்த மசோதாவின்படி, இங்கு குற்றம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் தலைமறைவானவர், குற்றம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட சொத்துக்கு உரிமை கோரும் முன், விசாரணையில் உதவுவதற்காக, சட்ட அமலாக்க அதிகாரியின் முன் நேரில் முன்னிலையாக வேண்டும்.
இந்த மசோதா பணமோசடிக் குற்றங்களை விசாரிப்பதை எளிதாக்கும். ஏனெனில், இங்கு பணமோசடி செய்யப்பட்ட பணமானது குற்றவியல் நடத்தையின் நன்மைகள் என்பதை அரசுத் தரப்பு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் டியோ விளக்கினார்.

